நூல்கள் பாடினால்
#நூல்கள் பாடினால்…
என்னைப் பிடித்தோர்க்கு
இல்லையில்லை துன்பங்களே
இன்பநிலை காண்பாயடி - கிளியே
என்றுமெனை ஏந்திடடி..
தொண்மைத் தமிழ் என்னைத்
தூளியிட்டு ஆட்டுகிற
வண்ணமிகு நூல்நானடி - கிளியே
வானறிவு ஈவேனடி..!
கம்பனின் காவியமும்
கணக்கொடு கணினியெல்லாம்
எம்வடிவில் கல்வியடி - கிளியே
எடுத்தியம்ப வேனுமோடி..!?
மண்ணில் மனிதரெல்லாம்
மாண்புறுவ ரெல்லோரின்
நுண்ணறிவு என்னாலடி - கிளியே
நூதனமும் என்னாலடி..!
பன்மொழியைத் தாள்சுமக்க
பந்தியிடும் நூலகங்கள்
நின்றுபசி தீர்க்குமடி - கிளியே
நெஞ்சிலுர மேற்றுமடி..!
தொட்டுப் புரட்டினாலும்
தொல்லைகளைப் போக்கிடுவேன்
விட்டுவிட்டுச் செல்வாரோடி - கிளியே
விலைதந்து ஏற்பாரடி..!
#சொ.சாந்தி