மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ்

தோழர்கள் அனைவருக்கும் வணக்கம்.

“பெருமை உடையவர் ஆற்றுவார் ஆற்றின்
அருமை உடைய செயல் “

யாராலும் செய்ய முடியாத ஒரு செயலை செய்துக்காட்டுபவர் வல்லவர். பெருமைக்குரியவர்.

”ஏரின் உழாஅர் உழவர் புயலென்னும்
வாரி வளங்குன்றிக் கால் “

மழை பெய்யாமல் எந்த உழவனும் கலப்பை கொண்டு உழமுடியாது. ஆம் தானே... ?
ஒருவர் ஊக்க காரணியாக திகழ்ந்து நல்லமனம் எனும் முகில் நம் மீது ஊக்கம், உற்சாகம் எனும் மழை தூறாவிட்டால் தொடர்ந்து எப்படி நம்மால் கோல் கொண்டு எழுதமுடியும்? இங்கே.. நமக்கு.. இந்த தளத்தில் நமது எழுதுகோல் எனும் கலப்பையை தூக்கி எழுத்து உழவுச்செய்ய.... இந்த இணையதள வானில் சிறப்பாக வீற்றிருக்கும் முகில் திரு. அகன் ஐயா. சரிதானே... ?

சரிதான்...
சரி.. வாருங்கள்.. சென்னை மயிலாப்பூர்.. கவிக்கோ மன்றத்திற்கு செல்வோம்.

**(ஏன்..? என்ன ? என கேட்க மாட்டீர்களா?
கேள்வி கேளுங்கள் தோழர்களே...!
ஒவ்வொரு கேள்வியும்.. ஒவ்வொரு பெரிய மாற்றத்திற்கு வழிவகுக்கும்.
கேள்வி கேட்காமல் விட்ட நம்ம மக்களால் தான்.. இந்த ஜனநாயகம் பணநாயகமாக மாறி சீரழிந்துக்கொண்டிருக்கிறது. நம் தொப்புள்கொடி உறவுகள் வாழ்ந்த ஈழத்தில் நம் சொந்த உறவுப் புலிகளை புழக்களைப்போல கொன்றழித்த இனப்படுகொலை நடந்தேறியது. கேள்வி கேட்போம். ஒவ்வொரு கேள்வியும் ஒவ்வொரு புரட்சிக்கான விதை. )

*** நம் தளத்திலிருந்து சமூகத்தின் அவலங்களையும், பொதுவுடைமைச் சித்தாங்கங்களையும் , உரிமை மறுக்கப்பட்டோருக்கான நியாயமான குமறல்களையும் பலபல கேள்விகளாக இந்த சமூகத்தை கூர்முனையில் தீட்டி... ஒரு தீர்வை நோக்கியும் கவிதை/கதை/உரைநடை படைப்புகளாக எழுதிய தோழமை வல்லுனர்களுக்கும் மற்றும் இலக்கியத்தில் முத்திரை பதித்த வல்லுனர்களுக்கும்... அவர்களை இன்னும் சீர்ப்படுத்தி புரட்சியாளர்களாக, சிந்தனையாளர்களாக, இலக்கிய மேதைகளாக உருவாக்க.. வளமாக்க ”தமிழன்பன் 80 ” எனும் விருது பெறும் நிகழ்ச்சிக்கும். நமது தோழர்களின் படைப்புகளை தொகுத்த நூல்களை வெளியிடும் நிகழ்ச்சிகாகவும்.. இவற்றை விடவும் மகாகவி ஈரோடு தமிழன்பன் அவர்கள் பிறந்தநாள் விழாவாகவும் கொண்டாடும் இந்த விழாவில் “ திசை கடக்கும் சிறகுகள் “ நூல் வெளியிடச் செய்ய வெகு தூரத்திலிருந்து நாம் கண்டு ரசித்த இலக்கிய/அரசியல்/ சமூக பெரும் புள்ளிகள் கலந்துக்கொண்டு உரையாற்றியதில் சில குறிப்புகளை அறியவும் தான் நான் உங்களை கவிக்கோ மன்றத்திற்கு அழைக்கிறேன்.

கவிக்கோ மன்றம் :
-----------------------------------

**கவிக்கோ திரு. அப்துல் ரஹ்மான் அவர்களுக்கு கெளரவம்,சிறப்பு செய்யும் வகையில் முஸ்தபா அவர்களால் ரஹ்மத் அறக்கட்டளை சார்பாக சில ஆண்டுகளுக்கு முன் திறக்கப்பட்டது. சென்னை மாநகரின் மையப்பகுதியான மைலாப்பூரில் மியூசிக் அகாடெமி மற்றும் நாரத கானா சபா அருகில் அமைந்த அதிநவீன் உள்ளரங்கமே கவிக்கோ மன்றம். இம்மன்றத்தின் துவக்கவிழாவில் கவிக்கோ திரு. அப்துல் ரஹ்மான் அவர்கள் அறிவித்ததுப்போல இந்த மன்றத்தில் அரசியல் மற்றும் அரசியல் சார்ந்த இயக்கங்களின் கூட்டத்திற்கு அனுமதி இல்லை. தமிழ் அறிஞர்கள் , சமூக அறிஞர்கள் உள்ளிட்டோர் பங்குபெறும் இலக்கிய கூட்டம், நூல் வெளியீடு முதலிய விழாவிற்கு மட்டும் அனுமதியுண்டு. இந்த கவிக்கோ மன்றத்தில் மகாகவி பாரதியார், பாரதிதாசன் முதல் வைரமுத்து வரையிலான இலக்கியத்தில் பெரும் பங்காற்றி சாதனைப்படைத்த உலகளாவிய கவிஞர்களின் ஒவியங்கள் அமைக்கப்பட்டிருக்கும். இது தமிழ் கவிஞர்களுக்கு கவிக்கோ மன்றம் செய்யும் கெளரவம். இந்த அரங்கம் குளிர்சாதன வசதியுடன் மிக அழகாகவும்.. நேர்த்தியாகவும் இருக்கின்றன.. கருப்பு, வெள்ளை நிறத்திலான இருக்கைகள் நம் விழிகளை கவர்ந்திழுக்கும். மேடையில் காணொளிகளை காண அகண்ட திரையும் அமைக்கப்பட்டிருக்கின்றன.


தோழர்களே.......!!

**அக்டோபர் 18 ம் தேதி. ஞாயிறு மாலை 4 : 30 மணி முதல் 9 மணி வரை புதுச்சேரி இணையதளப் படைப்பாளிகள் பேரவை , கவிமுகில் அறக்கட்டளை, விழிகள் பதிப்பகம், ஆகிய அமைப்புகள் சார்பில் ஈரோடு தமிழன்பன் 81ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா நடத்தப்பெற்றது இந்த மன்றத்தில் தான்.

**இதுவரையிலும் இந்த கவிக்கோ மன்றத்தில் பலபல இலக்கிய மாமேதைகள் பார்வையாளர்கள் இருக்கையிலும் அமர்ந்து இருக்கிறார்கள். மேடையிலும் வீர தீர விழிப்புணர்ச்சியான சமூக நல்லிணக்க கருத்துகள், இலக்கிய எழுச்சி.. உரையாற்றி இருக்கிறார்கள். கணையாழி இலக்கிய இதழின் பொன்விழா இந்த மன்றத்தில் தான் நடைப்பெற்றது.
இவ்வளவு சிறப்பு வாய்ந்த கவிக்கோ மன்றத்தில் தான்.. நமது தோழர்கள் ”தமிழன்பன் விருது “ மகாகவி தமிழன்பன் அவர்களின் பொற்கரங்களால் பெற்றார்கள்.
இந்த சிறப்பு வாய்ந்த மன்றத்தில் தான்... எழுத்து தளத்தில் நம் அனைவராலும் எழுதப்பட்டு.. தோழர்கள் திரு ஜோசப் ஜூலியஸ், திரு. பிரேமாபிரபா.. திரு. கருணாநிதி ஆகியோரால் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு, நமது தோழர்.. ஐயா. அகன் அவர்களால் தொகுத்து அளித்த “ தொலைந்து போன வானவில் “ , நமது தோழர்.. ஐயா திரு. பழனிகுமார் அவர்கள் எழுதிய நூல் ”நிலவோடு ஓர் உரையாடல் மற்றும் நமது தோழர்கள் எழுதிய கவிதைகளை தோழர்.கோவை கவிஜி, தோழர் . தாகு ஆகியோரால் தொகுக்கப்பட்ட “மழையும் மழலையும்” நூல்.. கனடா கோனீ சுவரிபட் குணரஞ்சன் எழுதிய ‘கனவோடு புதைந்தவர்கள்’ ஆகிய நூல்கள் திராவிட முன்னேற்ற கழக பொதுச் செயலாளர், இனமானப் பேராசிரியர் திரு. அன்பழகன் அவர்களின் திருகரங்களால் வெளியிடப்பட்டன. மகாகவி தமிழன்பன் அவர்களால் பெறப்பட்டன.

**இதில், மிக முக்கியமாக, நமது தோழர்களின் நூல்கள் வெளியிடுவதற்கு முன்னர் மகாகவி ஈரோடு திரு. தமிழன்பன் ஐயா எழுதிய ”திசை கடக்கும் சிறகுகள் “ நூல் இனமானப் பேராசிரியர் திரு.அன்பழகன் அவர்களால் வெளியிடப்பட்டு தமிழர் தலைவர் ஐயா..ஆசிரியர் திரு.கி.வீரமணியால் பெறப்பட்டன.

.. சிறப்பு அழைப்பாளர்களாக அழைக்கப்பட்ட அறிஞர்கள் வல்லுனர்களான உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி ”நீதிநாயகம் ” திரு. கே.சந்துரு, தமிழறிஞர் திரு. சிலம்பொலி சு.செல்லப்பன், மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் தோழர் சி.மகேந்திரன், கவிஞர் திரு. இன்குலாப், இருதய சிகிச்சை நிபுணர், மருத்துவர் சொக்கலிங்கம், கவிஞர்கள் திரு. பழனிபாரதி, சொற்கோ, திரு. தமிழமுதன், கவிமுகில், , பேராசிரியர் இரா. குருநாதன், விழிகள் நடராசன் உள்பட நமது எழுத்து தளத்தில் நமது முன்மாதிரியாக திகழும்.. மரபு மாமணி திரு. காளியப்பன் எசேக்கியல்.. , ”சிறுகதை திலகம்” பொள்ளாச்சி திரு. அபி. ஆகியோர் பங்கேற்று வாழ்த்துரை ஆற்றினார்கள். முன்னதாக நமது மாண்புமிகு ஐயா திரு. அமிர்தகணேசன் முன்னுரை ஆற்றினார்.**நினைத்தாலே இன்பமான பிரமிப்பாக இருக்கிறது அல்லவா ? இலக்கியத்தில் பெரும் சாதனை படைத்த அறிஞர்கள்.. சாதனையாளர்கள். முன்னிலையில் நமது தோழர்களின் நூல்கள் வெளியாகின. சாகித்திய அகாடமி விருதுப் பெற்ற மகாகவி தமிழன்பன் அவர்களின் பொற்கரங்களால் விருதுப் பெற்ற நமது தோழர்கள் எத்தகைய உற்சாகம் ஊக்கம் பெற்று இருப்பார்கள்.
இந்த உற்சாகம் அவர்களை எந்த உச்சத்திற்கு கொண்டு செல்லும்.. ம்ம்ம்ம் நாளை சரித்திரம் இதற்கு நிச்சயம் பதில் சொல்லும். அன்று இத்தகைய நிகழ்வுகளுக்கு எல்லாம் முக்கிய காரணமான.. ஒரே ஒரு காரணகர்த்தாவான திரு. அகன் எனும் ஒரு நல்ல மனிதரை நினைத்து நம் மனசாட்சியாவது நன்றியோடு வணங்கும். வணங்க வேண்டும்.


சரி.......

**விழாவில் பங்குப்பெற்ற நமது தோழர்கள் யார் யார் ? அகன் ஐயாவின் அர்பணிப்பு கண்டு நான் உணர்ந்தது என்ன.? கற்றது என்ன ? விழாவில் நடந்த சுவராசியங்கள் . தமிழறிஞர்கள்.. மகாகவி தமிழன்பன் ஐயா ஆற்றிய உரையின் போது நிகழ்ந்த ஒரு காதல் நிகழ்வு ... ஆகியன குறித்து இக்கட்டுரையின் அடுத்த பகுதியில் எழுதுகிறேன்.


நாளை மாலை வரை காத்திருங்கள்.


நன்றி


**

இரா.சந்தோஷ் குமார்

எழுதியவர் : இரா.சந்தோஷ் குமார் (21-Oct-15, 10:15 am)
பார்வை : 3763

சிறந்த கட்டுரைகள்

மேலே