நூல் மாற்றுத்திறனியம் நூல் ஆசிரியர் கவிஞர் தமிழ் இயலன் நூல் மதிப்புரை கவிஞர் இராஇரவி
நூல் : மாற்றுத்திறனியம்
நூல் ஆசிரியர் : கவிஞர் தமிழ் இயலன்
நூல் மதிப்புரை: கவிஞர் இரா.இரவி
வெளியீடு : நற்றமிழன் பதிப்பகம்,
640டி, காந்திநகர், இன்னம்பூர்,
கும்பகோணம் – 612 303,
பக்கங்கள்: 200, விலை: ரூ.225
******
நூலாசிரியர் கவிஞர் தமிழ் இயலன் ஒரு சகலகலா வல்லவர், பொறிஞர், கவிஞர், எழுத்தாளர், பேச்சாளர், ஆசிரியர், பகுத்தறிவாளர், சமூக செயற்பாட்டாளர் என பன்முக ஆற்றலாளர். மாற்றுத்திறனாளிகளை மாற்றுத்திறனாளி என்று அழைக்காமல் அவர்கள் என்னவாக இருக்கிறார்களோ அதைச் சொல்லி அடையாளப்படுத்துவதே சிறப்பு என்கிறார். தன்னை இவ்வாறு அடையாளப்படுத்தும் நண்பர்களுக்கு இந்நூலை காணிக்கையாக்கி உள்ளார்.
மாற்றுத்திறனியம் என்ற புது சொல்லாட்சி வழங்கி அதையே நூலாக்கி நூலின் பெயராகவும் சூட்டியுள்ளார் நூலாசிரியர் கவிஞர் தமிழ் இயலன். தந்தையின் நினைவு நாளில் நூலை வெளியிடத் தொடங்கி மாதா மாதம் 27ஆம் தேதி ஒரு நூல் என்று எழுதி வருகிறார். இந்த நூல் வெளியீட்டு விழா மதுரை மணியம்மை பள்ளியில் நடந்தது. பள்ளியின் தாளாளர்
பி.வரதராசன், நீதிபதி நடராசன், பேராசிரியர்கள் அரங்க மல்லிகா, நிர்மலா, மோகன், கவிஞர் துளிர், நான் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தோம்.
மாண்புடன் விளித்தல், அறிவுசார் அடையாளம், தகுதிக்கேற்ற பணி இவைதான் மாற்றுத்திறனியம் என குறிப்பிட்டு 40 கட்டுரைகள் வடித்துள்ளார்.
‘அடிப்படை உரிமைகள்’ என்ற முதல் கட்டுரையிலேயே மாற்றுத்திறனாளிகளுக்கு நாகரிகச் சமூகம் நல்க வேண்டிய அடிப்படை உரிமைகளைப் பட்டியலிட்டு நன்கு விளக்கி உள்ளார். இந்நூல் படித்தால் மாற்றுத்திறனாளிகளுக்கு உத்வேகத்தையும் மற்றவர்களுக்கு அவர்களை மதிக்க வேண்டிய கடமைகளையும் நன்கு உணர்த்தி உள்ளார்.
சங்க காலத்தில் கலகக்குரல் ஏனிச்சேரி குடமோகியார் என்ற கட்டுரையில் புறநானுற்றுப் பாடலை எழுதி அதற்கான உரையையும் கூறி, ‘கைம்மாறு கருதாமல், கடமை உணர்வோடு செய்யப்படும் உதவியே சிறந்தது’ என்பதை இப்பாடல் உணர்த்துகின்றது.
தடையைத் தகர்த்த தமிழ் அமுது – முடத்தாமக்கண்ணியார் என்ற கட்டுரையில். பொருநராற்றுப்படை படைத்தவர் ஒரு மாற்றுத்திறனாளி. நீயும் சோழனிடம் சென்றால் உன் வறுமை தீற்கும் வள்ளல் சோழன் என எடுத்தியம்பும் பாடல் விளக்கவுரை உள்ளது.
நூலின் தலைப்புகளே மிகச்சிறப்பாகச் சூட்டியுள்ளார். ‘விதியினை வெல்லும் வினையாண்மை’ திருக்குறள் எடுத்துக்காட்டி விளக்கி உள்ளது சிறப்பு. ‘உருவமல்ல உறுதியே உயர்வு’, ‘தேரை இயக்கும் அச்சாணி’ போன்றது மாற்றுத்திறனாளிகளின் மனஉறுதி என்கிறார். ‘காணார், கேளார், கால் முடப்பட்டோர் மணிமேகலையின் மாற்றுத்-திறனாளிகளுக்கான சமூக நீதி. இப்படி சங்க இலக்கியங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான சமூகநீதியை தேர்ந்தெடுத்து விளக்கி இருப்பது நன்று.
தமிழகத்தில் இருந்த பார்வை இல்லாத கவிஞரை இலங்கைக்கு வரவழைத்து யானையில் அமர்த்தி ஊர்வலம் நடத்தி பாடச்சொல்லி பரிசளித்த வரலாற்றை எழுதி உள்ளார். போக்குவரத்து வசதி இல்லாத காலத்தில் பார்வையற்றவர் இலங்கை சென்ற விந்தையைக் குறிப்பிட்டுள்ளார்.
“நூறு கவனங்களின் நாயகன்” கட்டுரையில் செய்குதம்பி பாவலர் பற்றி நன்கு விளக்கியுள்ளார். அவருக்கு தமிழக அரசு நாகர்கோயிலில் மனிமண்டபமும், பள்ளியும் அமைத்துச் சிறப்பித்துள்ளதையும் குறிப்பிட்டுள்ளார். ஊன்றுகோல் ஏந்தி மேடை ஏறி, உலகையே வியக்க வைத்தவர்.
‘உடலால் இருவர் உணர்வால் ஒருவர்’ இரட்டைப்புலவர்கள் பற்றியும் நூலில் வருகின்றது. இணையற்ற இணைக்கம் என்கிறார்.
எலன் கெல்லர் அவர்களுக்கு பார்வை இல்லை, காது கேட்காது, வாய்பேசவும் வராது. அவர் கரங்களில் இளங்கலைப்பட்டம் எப்படி சாத்தியமானது? எல்லோருக்கும் வியப்பு. அமெரிக்காவில் அலபமா மாநிலத்தில் பிறந்த இவர் பிறக்கும்போது நலமாக இருந்துள்ளார். 19 திங்கள் குழந்தையாக இருந்தபோது காய்ச்சல் வந்து கண்களையும் செவிகளையும் பறித்துப் போனது. அவர் சோகத்தில் முடங்கி விடவில்லை முயற்சி செய்து வென்று தன்னம்பிக்கையின் சிகரமாக விளங்கியதை எடுத்து இயம்பி உள்ளார்.
வில்மா ருடால்ப் அவர்கள் இனி இவரால் நடக்க முடியாது என மருத்துவர்களால் கைவிடப்பட்ட அதே கால்கள், ‘உலகின் மிக வேகமான பெண்மணி’ என்று உலகையே கொண்டாட வைத்தன. தடகளப் போட்டியில் 100, 200, 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் 3 தங்கப் பதக்கங்களை வென்று சாதித்தவர்.
நிக் அஜிசிக் அவர்களுக்கு தோல்களுக்கு கீழே கைகள் இல்லை. இடுப்பிற்குக்கீழ் கால்கள் இல்லை. ஆனால் அவர் ஒரு மேசை மீது நின்று பேசிய பேச்சு ‘எழுந்து நில்லுங்கள்’ என்ற அறைகூவல் அனைவருக்கும் தன்னம்பிக்கை விதைத்தது. அவரது உரை வீடியோக்களை இணையத்தில் பார்த்து வியந்து இருக்கிறேன். இப்படி சாதித்த மாற்றுத்திறனாளிகளை பட்டியலிட்டுள்ளார்.
“கால்கள் இல்லாமல் வெண்மதி வானில் தவழ்ந்து வரவில்லையா?” என்ற கவியரசு கண்ணதாசன் அவர்கள் வைரவரிப் பாடல்கள் எழுதி கட்டுரையை முடித்துள்ளார்.
பாகிஸ்தானின் இரும்புப் பெண்மனி முனிபாமசாரி, சேலம் தந்த சிங்கத் தமிழன் மாரியப்பன் தங்கவேலு, ஜான்மில்டன், காலத்தை வென்ற காவியத்தலைவன் ஸ்டீபன் ஹாக்கிங், முன்னாள் மத்திய அமைச்சர் ஜெயபால் ரெட்டி, நம்பிக்கையின் நாட்டியம் சுதாசந்திரன், உயரம் உள்ளத்தில் ஆர்த்தி டோக்ரா பெனோ செபின் விழி இழந்தும் வழிகாட்டும் விடிவெள்ளி, இப்படி சாதனையாளர்களின் வரலாற்றை எடுத்து இயம்பி அனைவரையும் சாத்திக்க வைத்திடும் அற்புத நூல், நூலாசிரியர் கவிஞர் தமிழ் இயலன் அவர்களுக்கு பாராட்டுகள்.

