பந்துப் படலம்

நாடு மற்றொரு நாட்டைத்
துரத்தும் ஒரு திடலுக்குள்
பகை விலக்கும் பந்து.

கால்களில் சுழலும் கோளம்
பூமியை வேகப்படுத்திவிட்டது
கடிகாரம் நின்றது திடுக்கிட்டு.

வார்த்தைகள் தொடர்ந்து
துரத்தும் முற்றுப் புள்ளியை
இலக்கில் காத்திருக்கும் அர்த்தம்.

காற்றுக் கனி கண்களுக்குள்
போடும் சுளைகள்
பசிகள் பல்லாயிரம் ஆரவாரிக்கும்!

வலையில் வெற்றியைப்
பிடித்துக் கொடுக்கும்
உதைபட்டு உருளும் பந்து

மைதானம் தளும்பும் ஓட்டங்களைப்
பையில் பிடித்தால் பரிமாறலாம்
பந்தயக் குதிரைகளுக்கு

பார்வையாளர் கண்களை
உருட்டிக் கொண்டே போகும் பந்து
வலைக்குள் சிக்க வைக்க
உதைகளைக் கொஞ்சம் திசை திருப்பினால்
ஊர் விவகாரங்களைத் தீர்த்து வைக்கலாம்;
பந்துக்கும் ஓய்வு.

காலில் கோலம் போட்டால்
இந்தக் கதிதான்
புள்ளியை ஓரிடத்தில் வைக்கவா முடியும்?

இரவு வானில் கால் பந்தாட்டம்
பந்து பெரியது
அடித்தவர்கள் சிதறி விழுந்தார்கள்.


கவிஞர் : ஈரோடு தமிழன்பன்(9-Mar-12, 12:32 pm)
பார்வை : 14


மேலே