நீ எங்கே இருக்கிறாய்?

சுதந்திர தேவியே
சொல்!
நீ எங்கே இருக்கிறாய்?

நாடி நரம்புகளில்
நெருப்பு நர்த்தனம் ஆடி எம்
முன்னோர்களுக்கு
வெறியூட்டியவளே நீ
எங்கே இருக்கிறாய்? சொல்!

இரத்த நதிகளைக் கடந்து
உன்னைச் சந்தித்தோம்!

தேசத்தையே
இரத்தக் கடலுக்குள் ஒரு தீவாகச்
செய்துவிட்டாய் நீ!

தவப்புயல்களுக்கு
அப்பால் உன்னைத் தரிசித்ததற்குப் பயன்
எரிமலை வரங்களா?

தேசபக்தர்களுக்கு
மகளாகப் பிறந்து
அரசியல் நரிகளுக்கு
அடிமையானவளே?

ஆகஸ்டு 15
பவுர்ணமிகளை ஒரு சிலர்க்கே, நீ
பட்டாப் போட்டுக் கொடுத்த
நாளா?

தியாக வேள்வியில்
உருக்கி வார்த்தெடுத்த
மூவண்ணக் கொடி
பாசாங்குக் காரர்களின்
மோசடிக் கரங்களால்
பாரத வானில் பறக்கிறது!

அவலத்தில்...
அவிழ்ந்து பறக்கும்
கூந்தலைப் போல்
கம்பத்தின் உச்சியில்
உன்கொடி கலைகிறது!

பகலெல்லாம்,
பாராளுமன்றத்தில்
குப்பை கூட்டுகிறாய்!
இரவுகளில் நீயே
கள்ளச் சந்தைகளில்
கைமாறுகிறாய்!

திலகனும், சிதம்பரனும்
சுபாஸ் சந்திரனும்
செய்த முழக்கங்கள்
கலந்து விட்ட காற்றை
வடிகட்டிச் சுவாசிக்கிறாய்

பகத்சிங், குமரன்
இரத்தக் கறைகளை
ஓட்டுச் சீட்டுகளால்
துடைத்தது மட்டுமா...?
சந்தர்ப்ப வாதிகளின்
பச்சோந்தி பிம்பங்களைத்
தீட்டியும் வைத்தாய்!

உனது
தேசிய மயிலின்
தோகைக் காசுகள்
மார்வாடிகளின்
கல்லாப் பெட்டிகளில்
இதுவரை!

இனிமேல்,
மூலதனத் தீனிபோட்டு
அந்நிய நாடுகளும்
அதன் சிறகு முறிக்கும்.

சுதந்திர தேவி!
உனது பெயரில்
மதவெறி நடத்தும்
மரணத் திருவிழாக்கள்...

பலி பீடங்களில்
தேசபக்தியின் தலை திருகி எடுக்கப்படும்.

சாதிக் கலவரங்களில்
எரியும் மானுடம்!
சாம்பல்
உனது பிரசாதமாய்ச்
சகலர்க்கும் விநியோகம்!

வார்த்தைகளைத் திறந்து
மகாவீரரை, புத்தரை,
காந்தியை, காமராசரை
பெரியாரைக் காட்ட
ஊழல் புத்திரர்களுக்கு
ஒரு குறைச்சலும் இல்லை!

கதவடைத்து
வீட்டுக்குள் இலஞ்சத்தைப் பாலூட்டி
வளர்ப்பார்கள்...
அர்ஷத் மேத்தாக்களே
ஆயாக்கள்!

வெளியே
இலஞ்சத்தைத் தேடிக்
கைது செய்யப்
பிடி ஆணை உத்தரவுகள்!

பொய்ம்மை
அறிக்கைகளுக்குப் பொம்மைகளின் கையெழுத்து!

சுதந்திர தேவி!
'வெள்ளையனே வெளியேறு'
என்றோம்
வெளியேறி விட்டான்
'கொள்ளையனே வெளியேறு'
யாரைப் பார்த்து
யார் சொல்வது?

போலி ஜன நாயகத்
தேர்தல்களால்
களங்கப்பட்டவளே!

நீ
எங்கே இருக்கிறாய்?
எப்போது புனிதப்படுவாய்?


கவிஞர் : ஈரோடு தமிழன்பன்(9-Mar-12, 12:30 pm)
பார்வை : 73


மேலே