தன்னிரக்கப் பா

நடந்த தடமெல்லாம் தேடிக்
களைக்கிறேன்
உலர்ந்த பூச்சரம் உதிர்ந்த கொலுசுமணி
களைந்த கேசச்சுருள் வெட்டிய நகப்பிறை
காட்சிப் படாதாவென

காலை அரும்பிப் பகலில் போதாகி
மாலை மலர்ந்த நோய்
இரவு ஏன் ஈட்டியால் எறிகிறது

உற்றாரை வேண்டாது ஊராரும் சாராது
கற்றாரைக் காணாது கற்றனவும் முன்மறந்து
பொற்பாதம் தேடிப் பூமுகமும் காணாமல்
வெற்றாரென அயர்ந்து வீழ்ந்தும் கிடந்தேனே

சங்கிலிப் பூவத்தான் தங்கக் கிடாரம்
மூத்துக் குறுகி இறக்கை முறைத்த
ராஜ நாகத்தின் நன்மணி
தேசப்பிதாக்களின் சுவிஸ் வங்கி வைப்பு
எனக் கலங்கி

முட்டாள் பயல்போலும் முதுகுத் தண்டற்றும்
கிட்டாது என்றாலும் கிடையாய்க் கிடந்தேனே
எளிதாக ஏறிவரும் ஏற்றடி ஒன்றீண்டு
எந்தநாள் காண்பேன் இனி.


கவிஞர் : நாஞ்சில் நாடன்(2-May-14, 2:36 pm)
பார்வை : 0


மேலே