தமிழை கல்விமொழி ஆக்கு

தமிழை கல்விமொழி ஆக்கு
தமிழ்மொழி பேசட்டும்
உன் பிள்ளை நாக்கு

வெள்ளைக்காரன் மொழியை
கற்றுக்கொடாதே - என்
பிள்ளை வாயில் கொடிய
நஞ்சை இடாதே!

மணிப்புறா ஒரு நாளும்
குயில் மொழி ஏற்காது!
மான் நரி மொழியைத்தன்
நாக்கிலே தூக்காது!
அணிற்பிள்ளை கிளிமொழி
பேசவே பேசாது!
ஆங்கிலத்தை நீயேன்
சுமக்கின்றாய் கூசாது?

பிள்ளையே தன் தாயை
கண்முன் வதைப்பதா?
பேசும் தாய்மொழியின்
உயிரை நாம் சிதைப்பதா?
பள்ளியே தமிழுக்கு
கொள்ளியாய் ஆவதா?
பாராண்ட தமிழ்மொழி
சாவதா? சாவதா?

வள்ளுவன் ஆங்கிலம்
படித்தானா? இல்லையே!
வந்தான் வெள்ளையன் இங்கு
வந்தது தொல்லையே!
வெள்ளைக்காரன் போயும்
விலங்கு அறல்லையே!
வேண்டாத தமிங்கிலம்
உடைக்குது பல்லையே!


கவிஞர் : காசி ஆனந்தன்(12-Apr-11, 11:40 pm)
பார்வை : 26


மேலே