தமிழ் கவிஞர்கள்
>>
காசி ஆனந்தன்
>>
எழுவாய் நீ நெருப்பாய்!
எழுவாய் நீ நெருப்பாய்!
தமிழா நீ தமிழ் வாழப்
பணி ஆற்று!
தமிழல்லவா உன்னை
இயக்கும் உயிர்க்காற்று!
உறவை நீ இழக்காதே!
தமிழையே மொழிவாய்!
பிறமொழி கலக்காதே!
கலந்தால் நீ அழிவாய்!
இசைவிழா மேடையில்
தமிழிசை முழக்கு!
வசையாரும் பாடினால்...
வரலாற்றை விளக்கு!
மண்மீதில் தமிழ்ப்புலவன்
மனம் நோக விடாதே!
உண்ணாமல் அவன் வாழ்ந்தால்
உணவை நீ தொடாதே!
தமிழ்வாழ உழைப்போர்க்கு
துணையாக இருப்பாய்!
தமிழையார் எதிர்த்தாலும்
எழுவாய் நீ நெருப்பாய்!