கொய்தல்

பறவை எச்சமோ விலங்கினக் கழிவோ
விதையொன்று வீழ்ந்தது
கிடந்தது விதைத்துயில் கொண்டு
முளைப்பதும்
முளையாதிருப்பதும்
அதனதன் முனைப்பு
முளைத்தது
வெள்ளாடு களைக்கொட்டு கவாத்து
துணிந்து எறியாதிருந்தது நல்லூழ்
அந்தரங்கத்தில் கனவொன்றிருந்தது
கிளை கொடி வீசிப்படர்ந்து
காலை அரும்பிப் பகலில் போதாகி
மாலை மலர்ந்தது
வனப்பு வடிவு வண்ணம் என்பன
வசத்தில் இல்லை
வாசம் என்பதோர் நல்வினை யாமெனில்
வாசம் என்பதோர் தீவினை
உதிர்தல் இயல்பு
பறித்தல் என்பது வலியின் ஆட்சி
ஆயுளைத் துணித்தல்
மங்கை கூந்தல் இறை தோள்மாலை
செண்டின் செறிவு
ஏதும் ஆயினென்
கொய்தல் என்பது கொலைத்தொழில்
முளைத்தல் விதியெனில்
பூத்தல் பணி செய்து கிடத்தல்
கொய்தல் என்பதோர் கொடுங்கை.


கவிஞர் : நாஞ்சில் நாடன்(2-May-14, 2:37 pm)
பார்வை : 0


பிரபல கவிஞர்கள்

மேலே