பசி
இறுதியில்
காவல் அதிகாரி
என் கவிதையைப் பிடித்துக் கொண்டு சென்றார்
விசாரணையின் போது அவர் கண்களைக் கட்டிக் கொண்டிருந்தார்
ஆடையில்லாத என் கவிதையைக் காண
அவருக்கு அச்சமாக இருந்ததாம்.
குற்றங்கள் விளைவிப்பதே
தன் தலையாயப் பணி என்பதை
என் கவிதை ஒத்துக் கொண்டதால்
அபராதம் அல்லது சிறைத்தண்டனை, பிணை இல்லையென்று
ஆணையிட்ட நீதிபதி
தன் கண்களோடு காதுகளையும் பொத்திக் கொண்டிருந்தார்
என் கவிதை பேசிய சொற்களின் புதிய அர்த்தங்கள்
அவரை திடுக்கிடச் செய்தனவாம்
அபராதம் கட்ட பணம் இல்லாததால்
சிறையிலடைக்கப்பட்ட என் கவிதை
கம்பிகளை மீட்டிக்கொண்டு
சதா பாடல்களை இசைத்தபடியிருந்தது
நாளடைவில் மற்ற கைதிகளும்
ஆடைகளை களைந்தனர்
அவர்கள் பேசத் தொடங்கிய புதிய மொழியால்
அதிகாரிகள் மனம் பிறழ்ந்தனர்
சிறைச்சாலைக்குப் பிடித்த பைத்தியம்
மெல்ல நகரமெங்கும் பரவியது
நிர்வாணம் பெற்ற அந்த நகரத்தில்
அதன்பிறகு
அரசும் இல்லை
குடும்பமும் இல்லை
கலாசாரமும் இல்லை
நாணயங்களும்இல்லை விற்பனையும் இல்லை
குற்றமும் இல்லை
தண்டனையும் இல்லை