அந்தி

அடிவானம் சிரிக்கிறது! மோதி மோதி
ஆயிரமா யிரமான வாள்மு ழக்கம்
முடிவான பெருங்கலிங்கப் போர்க்க ளத்தின்
முகமாகச் சிவக்கிறது! மினுக்கும் வைரப்
பொடியான விண்மீன்ஒவ் வொன்றாய்த் தோன்றிப்
புன்னகையை விரிக்கிறது! யானைக் கொம்பு
வடிவான பிறைத்திங்கள மேகம் கீறி
வருகிறது! வளர்கிறது! வாழ்க அந்தி!

காலைமலர் கதிரவனின் பிரிவுக் காகக்
கண்ணீரை வடிக்கிறது! காத்தி ருந்த
மாலைமலர் மாப்பிள்ளை மதியைக் கண்ட
மகிழ்ச்சியிலே சிலிர்க்கிறது! கண்ப றிக்கும்
சோலைமலர் வண்டுக்குத் தேனை ஊட்டித்
தூங்கவைக்கப் பார்க்கிறது! வனப்பு வாழும்
சேலைமலர்க் குழுஒன்று குடத்தைத் தூக்கிச்
செல்கிறது சித்திரத்தேர் போல சைந்தே!


கவிஞர் : மீரா (கவிஞர்)(9-Mar-12, 6:28 pm)
பார்வை : 95


மேலே