மகாமகோபாத்யாயர் வாழ்த்து

செம்பரிதி ஒளிபெற்றான் பைந்நறவு
சுவைபெற்றுத் திகழ்ந்தது ஆங்கண்
உம்பரெலாம் இறவாமை பெற்றனரென்று
எவரேகொல் உவத்தல் செய்வார்?
கும்பமுனி யெனத்தோன்றும் சாமிநா
தப்புலவன் குறைவில் சீர்த்தி
பம்பலுறப் பெற்றனனேல், இதற்கென்கொல்
பேருவகை படைக்கின்றீரே?


1

பு{[குறிப்பு]: இளசை -- எட்டயபுரம்.
தமிழ்த்தாத்தா எனப்படும் டாக்டர் உ.வே.சா.
அவர்கள் மகாமகோபாத்யாயப்பட்டம்
பெற்றபோது பாடிப் படித்த செய்யுட்கள் இவை.}

அன்னியர்கள் தமிழ்ச்செவ்வி யறியாதார்
இன்றெம்மை ஆள்வோ ரேனும்
பன்னியர்சீர் மகாமகோ பாத்தியா
யப்பதவி பரிவின் ஈந்து
பொன்னிலவு குடந்தைநகர்ச் சாமிநா
தன்றனக்குப் புகழ்செய் வாரேல்,
முன்னிவனப் பாண்டியர்நாள் இருந்திருப்பின்
இவன்பெருமை மொழிய லாமோ?

2
நிதியறியோம் இவ்வுலகத் தொருகோடி
இன்பவகை நித்தம் துய்க்கும்
கதியறியோம் என்றுமனம் வருந்தற்க;
குடந்தைநகர்க் கலைஞர் கோவே!
பொதியமலைப், பிறந்தமொழி வாழ்வறியும்
காலமெலாம் புலவோர் வாயில்
துதியறிவாய், அவர்நெஞ்சின் வாழ்த்தறிவாய்,
இறப்பின்றித் துலங்கு வாயே.


கவிஞர் : சுப்பிரமணிய பாரதி(18-Oct-12, 5:28 pm)
பார்வை : 0


மேலே