காரைக்குடி ஹிந்து மதாபிமான சங்கத்தார்

மண்ணுலகின் மீதினிலே எக்காலும்
அமரரைப்போல் மடிவில் லாமல்
திண்ணமுற வாழ்ந்திடலாம் அதற்குரிய
உபாயமிங்கு செப்பக் கேளீர்!
நண்ணியெலாப் பொருளினிலும் உட்பொருளாய்ச
செய்கையெலாம் நடத்தும் வீறாய்த்
திண்ணியநல் லறிவொளியாய்த் திகழுமொரு
பரம்பொருளை அகத்தில் சேர்த்து,
1

‘செய்கையெலாம் அதன் செய்கை, நினைவெல்லாம்
அதன் நினைவு, தெய்வ மேநாம்
உய்கையுற நாமாகி நமக்குள்ளே
யொளிர்வ’தென உறுதி கொண்டு,
பொய், கயமை, சினம், சோம்பர், கவலை, மயல்,
வீண்விருப்பம், புழுக்கம், அச்சம்,
ஐயமெனும் பேயையெலாம் ஞானமெனும்
வாளாலே அறுத்துத் தள்ளி,
2

எப்போதும் ஆனந்தச் சுடர் நிலையில்
வாழ்ந்துயிர்கட் கினிது செய்வோர்
தப்பாதே இவ்வுலகில் அமரநிலை
பெற்றிடுவார்; சதுர் வேதங்கள்
மெய்ப்பான சாத்திரங்கள் எனுமிவற்றால்
இவ்வுண்மை விளங்கக் கூறும்
துப்பான மதத்தினையே ஹிந்துமத
மெனப்புவியோர் சொல்லு வாரே.
3

அருமையுறு பொருளிலெலாம் மிகவரிதாய்த்
தனைச்சாரும் அன்பர்க் கிங்கு
பெருமையுறு வாழ்வளிக்கும் நற்றுணையாம்
ஹிந்துமதப் பெற்றி தன்னைக்
கருதியதன் சொற்படியிங் கொழுகாத
மக்களெலாம் கவலை யென்னும்
ஒருநரகக் குழியதனில் வீழ்ந்துதவித்
தழிகின்றார் ஓய்வி லாமே.
4

இத்தகைய துயர்நீக்கிக் கிருதயுகந்
தனையுலகில் இசைக்க வல்ல
புத்தமுதாம் ஹிந்துமதப் பெருமைதனைப்
பாரறியப் புகட்டும் வண்ணம்,
தத்துபுகழ் வளப்பாண்டி நாட்டினிற்
காரைக்குடியூர் தனிலே சால
உத்தமராந் தனவணிகர் குலத்துதித்த
இளைஞர்பலர், ஊக்கம் மிக்கார்,
5

உண்மையே தாரகமென் றுணர்ந்திட்டார்,
அன்பொன்றே உறுதி யென்பார்,
வண்மையே குலதர்ம மெனக்கொண்டார்,
தொண்டொன்றே வழியாக் கண்டார்,
ஒண்மையுயர் கடவுளிடத் தன்புடையார்,
அவ்வன்பின் ஊற்றத் தாலே
திண்மையுறும் ஹிந்துமத அபிமான
சங்கமொன்று சேர்த்திட் டாரே.

6
பல நூல்கள் பதிப்பித்தும், பலபெரியோர்
பிரசங்கம் பண்ணு வித்தும்
நலமுடைய கலாசாலை புத்தகசா
லைபலவும் நாட்டி யுந்தம்
குலமுயர நகருயர நாடுயர
உழைக்கின்றார், கோடி மேன்மை
நிலவுற இச் சங்கத்தார் பல்லுழி
வாழ்ந்தொளிர்க, நிலத்தின் மீதே


கவிஞர் : சுப்பிரமணிய பாரதி(18-Oct-12, 5:32 pm)
பார்வை : 0


பிரபல கவிஞர்கள்

மேலே