உன்னை நான் தேடுகிறேன் ..... சுற்றி பலர் இருப்பினும்...
உன்னை நான் தேடுகிறேன் .....
சுற்றி பலர் இருப்பினும்
பற்றிக் கொள்ளும் ஒற்றை பார்வையில் நலம் விசாரிப்பாயே....
அந்த உன்னை நான் தேடுகிறேன்!
இரவுகளை குழப்பி
கனவுகளை எழுப்பி...
விடியும் வரை காதல்
கதைப்பாயே..!
அந்த உன்னை நான்
தேடுகிறேன் ...!
முன் விழும் என்
நெற்றி முடிக்கே...
முன்னூறு கவிகள்
முடிப்பாயே!!
அந்த உன்னை நான் தேடுகிறேன்!
என் கன்னக் குழி
ரசிக்க காதல் பேசி
சிரிக்க வைப்பாயே ...
அந்த உன்னை நான் தேடுகிறேன்!
எட்ட முடியா தூரம்
உன் வானம்
என தெரிந்தும்
சிறகடிக்கும்
என் ஆசைகளும் ....
கண் காணா தொலைவு
கடந்து விட்டாய்
என அறிந்தும்
பின் தொடரும்
என் நினைவுகளும் ....
கானல் நீரில் மீன் பிடித்து,
எட்டுச் சுரக்காயில் விருந்து சமைத்து
காத்திருக்கும்
என் எண்ணங்களும் ....
உன்னை இழந்ததை உணராமலேயே
நினைவுகளில் துடித்துக் கொண்டிருக்கும்
என் இதயமும் .....
உண்மை உணர்ந்த பின்
ஓர் நாள் சொல்லும் ...
உன்னை நான் தேடுகிறேன்
அதனாலே இன்று
கல்லறையில் வாடுகிறேன் என்று...!