பழுதென்ன கண்டீர் என் பாட்டில்?
சிலரெழுதக் கூடாது; மேடை ஏறிச் சிலர்பேசக் கூடாது; சிறிதே கற்றுப்
பலரெழுதிக் கெடுக்கின்றார்! துக்ளக் என்னும்
பத்திரிகை நடத்திவரும் நண்பர் சோவோ,
அலைவரிசை வசனந்தான் கவிதை என்னும்
அவதாரம் என்றிங்கே வாதிக் கின்றார்!
தலைவரிசைக் கவிஞர்களைத் தாக்கு கின்றார்
தாக்குமிவர் தாக்கெல்லாம் பள்ளத் தாக்கு!
ஆனந்த விகடனில்யான் எழுது கின்ற
ஆசிரியப் பாக்களிலே, எதுகை மோனை
ஊனமுண்டா? ஓட்டையுண்டா? கம்பாசிட்டர்
உதவியெனக் கெதற்காக? இவர்க்குச் சொல்வேன்:
மீனெதற்குச் சைவனுக்கு? விளக்கைக் காட்ட
விளக்கெதற்கு? பாப்புனையும் நூல்கள் கற்றே
நானெழுதி வருகின்றேன். நீரூற்றாமல்
நகம்தானாய் வளராதா? வளரு மன்றோ?
ஆடுதற்குத் தெரியாத பருவ மங்கை
அழகான முற்றத்தைக் கோணல் என்றால்
வீடுகட்டி வைத்தவர்கள் சிரிப்ப தன்றி
வேறென்ன செய்வார்கள்? இலக்கியத்தில்
ஈடுபடா திருக்குமிவர் என்றன் பாட்டை
எடைபோட வந்துவிட்டார்! எந்த நாளும்
மாடுமுட்டிக் கோபுரங்கள் சாய்வ தில்லை!
மாணிக்கம் கூழாங்கல் ஆவ தில்லை!