ஆய்ந்து பார்

சாந்தியால் உலகம் தழைப்பது நன்றா?
சமயபே தம்வளர்த்தே தளர்வது நன்றா?
மாந்தரிற் சாதிவகுப்பது சரியா?
மக்கள் ஒரே குலமாய் வாழ்வது சரியா?

வாய்ந்தபோர்க் குறிபோல் மதக்குறி இனிதா?
மனமொழி மெய்ஒன்றி மகிழுதல் இனிதா?
ஆய்ந்து பார் நெஞ்சமே அமைதிதான் சிறப்பா?
அண்டை வீட்டைப்பறிக்கும் சண்டைதான் சிறப்பா?

காணுமானிடரைக் கனம் செயல் முறையா?
கடவுள் எனும் மயக்கில் கவிழ்ப்பது முறையா?
மாணுறும் தன்னம்பிக்கை வளர்ப்பது நலமா?
வயப்படும் பக்தியினால் பயப்படல் நலமா?

வீணரைப் பணிவது மக்களின் கடனா?
மேவும் உழைப்பினிலே ஏவுதல் கடனா?
நாணு மூடவழக்கம் நாடுதல் பெரிதா?
நல்லறி வென்னும்வழிச் செல்லுதல் பெரிதா?

கோயிலுக் கொன்று கொடுத்திடல் அறமா?
கோடிகொடுக்கும் கல்வி தேடிடல் அறமா?
வாயிலில் வறியரை வளர்த்திடல் அன்போ?
மடத்தில் வீணிற்பொருளைக் கொடுத்திடல் அன்போ?

நாயினுங் கடையாய் நலிவது மேலா?
நல்ல கூட்டுத்தொழில்கள் நாட்டிடல் மேலா?
ஓய்வறியார் உறங்க இடந்தரல் உயர்வா?
ஊரை வளைக்கும்குரு மார்செயல் உயர்வா?

மாதர்தம் உரிமை மறுப்பது மாண்பா?
மாதர் முன்னேற்றத்தால் மகிழ்வது மாண்பா?
மேதினி துயர்பட விரும்புதல் இதமா?
விதவைக்கு மறுமணம் உதவுதல் இதமா?

கோதையர் காதல் மணம் கொள்வது சீரோ?
குழந்தைக்கு மணஞ்செய்து கொல்வது சீரோ?
போதனையாற் பெண்கள் பொதுவெனல் கனமோ?
பொட்டுக்கட்டும் வழக்கம் போக்குதல் கனமோ?

பாழ்படும் பழமை சூழ்வது திறமா?
பகுத்தறிவால் நலம் வகுப்பது திறமா?
தாழ்பவர் தம்மைத் தாழ்த்துதல் சால்போ?
தனம் காப்பவர் தங்கள் இனம் காத்தல் சால்போ?

ஆழ்வுறும் ஆத்திகம் வைதிகம் சுகமா?
அகிலமேற் சமதர்மம் அமைப்பது சுகமா?
சூழும் நற்பேதம் தொடர்வது வாழ்வோ?
சுயமரியாதையால் உயர்வது வாழ்வோ?


கவிஞர் : பாரதிதாசன்(3-Jan-13, 4:17 pm)
பார்வை : 0


பிரபல கவிஞர்கள்

மேலே