தமிழ்மேல் ஆணை!

தங்கத் தமிழ்மிசை ஆணை! - என்றன்
தாய்நிகர் தமிழக மண்மிசை ஆணை!
சிங்க மறத்தமிழ் வீரர் - எங்கள்
செந்தமிழ்த் தோழர்தம் தோள்மிசை ஆணை!
சங்கு முழக்கி யுரைப்பேன் - நாளைச்
சண்டைக் களத்திலே சாக வந்தாலும்
மங்கிக் கிடக்குந் தமிழை - மீண்டும்
மாளிகை ஏற்றி வணங்கியே சாவேன்!

கன்னித் தமிழ்மகள் தெய்வம்! - அவள்
காதல் அருள்விழி காட்டிவிட் டாளடா!
என்ன சுகமினித் தேவை? - இந்த
எலும்புந் தசையு மெதுக்கடா தோழா?
மின்னி முழங்குது வானம் - இடி
மேகத்தி லேறிவலம் வர வேண்டும்!
தின்னப் பிறந்து விட்டோமா? - அட
செங்களம் ஆடப் புறப்பட்டுவாடா!

நேற்று மதிப்புடன் வாழ்ந்தோம்! - இந்த
நிலத்தின் திசைகளனைத்தையும் ஆண்டோம்!
ஆற்றல் மிகுந்த தமிழை - அரி
அணையில் இருத்தி அழகு சுவைத்தோம்!
சோற்றுப் பிறவிகளானோம்! - இன்று
சொந்தப் பெருமை யிழந்து சுருண்டோம்!
கூற்ற மெதிர்த்து வந்தாலும் - இனிக்
கூனமாட்டோ மென்று கூவடா சங்கம்!

தென்றல் தவழ்ந்திடும் மண்ணில் - நாங்கள்
தீயும் புயலும் வலம்வரச் செய்வோம்!
குன்றும் மலையும் நொறுக்கி - இந்தக்
கொடிய உலகம் பொடிபடச் செய்வோம்!
என்றும் இனிய தமிழை - அட
இன்னுயிர் மூச்சை அமுதக் குழம்பை
மன்றம் மதித்திடவில்லை - என்றால்
மக்கள் உலகம் எதுக்கடா தேவை?

கூவும் அலைகடல் மீதும் - பொங்கிக்
குமுறி வெடிக்கும் எரிமலை மீதும்
தாவும் வரிப்புலி மீதும் - எங்கள்
தடந்தோள் மீதுமோர் ஆணையுரைப்பேன்...
நாவும் இதழு மினிக்கும் - இன்ப
நற்றமிழ் மொழிக்கோர் நாடுங் கொற்றமும்
யாவும் உடனிங்கு செய்வோம்! - இந்த
யாக்கை பெரிதோ? தமிழ் பெரிதோடா?

கொட்டு தமிழா முரசம்! - அட
குறட்டைத் தூக்கம் நிறுத்தடா" என்று
வெட்ட வெளியிடைக் கூவி - என்றன்
விழிக ளெதிரே தமிழ் மகள் வாயின்
பட்டு முறுவல் சுவைத்தேன்! - அவள்
பார்வை எதிரே மறைந்தனள் கண்டீர்!
சட்டென் றுலகில் விழுந்தேன்! - என்றன்
சங்கொலி கேட்டு விழித்தது தானை!


கவிஞர் : காசி ஆனந்தன்(12-Apr-11, 11:28 pm)
பார்வை : 23


மேலே