சிறுதெய்வம்

நினைப்பதை விரும்புவதைப்
பேசயிலாத,
மந்திரத்தில் கட்டுண்ட
சிறு தெய்வம் யாம்
பெயர் சுடலை மாடன், கழுமாடன், புலைமாடன்
யாதெனில் என்?
உறுமல், குமுறல், சைகை
நயனத்து அசைவு, நடமிடும் காற்சுவடு
எம் மொழி
கூக்குரல் எம் சிலிர்ப்பு
ஊளை எம் கானம்
உன் குலக் காவல் எம் தொழில்
நீ
பலிசேய்வாய் -
கொம்பு முறுகி விதை திரண்ட
ஆட்டுக்கடா,
கடைவாயிற் பல்முளைத்த
கொம்பன் பன்றி,
கருஞ்சிகப்புச் சேவல், கன்னி கோழி முட்டை,
வம்பன் தடியங்காய்
படைப்பாய் -
பச்சரிசிச் சோறு, வாற்றுச் சாராயம்,
எள்ளுப்பிண்ணாக்கு கருப்பட்டி,
சுட்ட கருவாடு, சுருட்டு,
வருக்கைப்பலா, மட்டிக் குலை,
பிளந்து வைத்த வெள்ளரிக்காய்,
சோடிப்பாய்
கமுகம் பூ, தாழம் பூ, பிச்சிப் பூ
அதரளிப் பூ, பூந்துளசி
அணிவிப்பாய் -
எருக்கலம் பூ மணி கோர்த்த சல்லடம்
இடுப்புக் கச்சை, பாயச்சல் கயிறு,
தலைக்குல்லாய்
ஆயுதமாய்க்
குந்தம், ஈட்டி, தண்டம், வெட்டரிவாள்
அதிரக் கொட்டுவாய் -
தவில், முரசு, பம்பை, உடுக்கு, கைதாளம்
உறுமி, மகுடம், தப்பட்டை
யாதொன்றும் வேண்டாம் எமக்கு
நெய்யாற்றின் கரை வாழும்
மாந்தரீகனைக் கூப்பிட்டு
எம் வாய்க்கட்டு அவிழ்த்து விடு
வெண்டை வெண்டையாய் நாலு வாக்கு
கேட்க வேண்டும் உன்னை..
த்தூ…!
நீ ஒரு மனிதன் தானா?


கவிஞர் : நாஞ்சில் நாடன்(2-May-14, 2:49 pm)
பார்வை : 0


மேலே