அறமா? மறமா?

தோளின் கிளி பறந்த மீனாட்சி
கொண்டை அவிழ அலையாய்
அளகம் சரிந்த நாச்சி
பொற்கிண்ணப் பால் வார்த்து
ஞானப்பசி கிளத்திய உமையாள்
தாம்பூலம் உமிழ்ந்து கவிக்கண்
திறந்த காளி
தவழ்ந்தும் உருண்டும்
பனிமலை எய்திய ஆதிசிவன் அம்மை
கன்றும் உண்ணாது கலத்திலும் வீழாது
காமத் தீம்பால் மண்ணுக்குப் பாயும்
மாயம் ஆய்ந்த வெள்ளி வீதி
கால் நொந்து கருகி வழி நடந்த அவ்வை
கோழைக்குக் கொடுத்த கொங்கை
அறுத்தெறிய
வஞ்சினம் உரைத்த தெரிவை
தாயிறந்து கதறும் மகற்கு
முலை திணித்து ஆற்றிய
முதற்பேற்றுச் செவிலி
கைம்பிள்ளைச் சோறும் பசும்பாலும்
தினமும் அருளிய பெரியம்மை
யாவும் நீ
தனித்த நீ
தானாய் உயிர்த்த நீ
பிறகேன் கையெறீந்தாய்
உன் கனக முலைப் பால் குடித்த
கணக்கற்ற மதலையாரை?
தமிழ் எனில் அறமா?
அன்றேல் புன் மறமா?


கவிஞர் : நாஞ்சில் நாடன்(2-May-14, 2:52 pm)
பார்வை : 0


மேலே