பிடி சாபம்!
கன்னெஞ்சர் சிங்களத்தர்
கயவர் என் தமிழ்ஈழத்தை
அன்னை மண்ணைச் செந்தீயால்
அழித்தார் என்றெழுந்த சேதி
மின்னலாய்த் தாக்கிற்றம்மா...
விம்மிநின் றழுகின்றேன் யான்!
என்கண்ணில் நீரா? இல்லை!
இதுவும் தீ! இதுவும் தீயே!
யாழ்நகர் நல்லறங்கள்
யாவிலும் ஊறி மக்கள்
வாழ்நகர் தமிழர் வாழ்வில்
வற்றாத கல்வி மேன்மை
சூழ்நகர் கொடியர் தீயில்
துகள் சாம்பலாகி அந்தோ
பாழ்நகர் ஆன தென்றார்!
பதறுதே தமிழ் நெஞ்சம்!
வீடுகளெல்லாம் தீயால்
வீழ்த்தினார்! கடைகளெல்லாம்
கேடுற நெருப்பு வைத்தார்!
கீழ்மன வெறியர் எங்கள்
பீடுறு யாழ்மா நாட்டின்
பெரியநூல் நிலைய மீதும்
போடுசெந் தீயை என்றார்...!
பொன்னூல்கள் எரித்தார்! சென்றார்!
அம்மம்மா! என்ன சொல்வேன்?
அனலிலே கம்பன் மாண்டான்!
இம்மா நிலம் வணங்கும்
இனியவள் ளுவன் மடிந்தான்!
"உம்"மென எழுந்த தீயில்
உயர் தமிழ் இளங்கோ செத்தான்!
செம்மனப் புலவ ரெல்லாம்
செந்தீயில் வெந்தா ரம்மா!
கொடுந்தீயே! சிங்களத்தின்
கொடுந்தீயே! இது நீ கேளாய்!
நெடுங்காலம் நின்றன் கொட்டம்
நில்லா! இப்புலவன் உன்மேல்
இடுஞ்சாபம் இன்றே ஏற்பாய்!
இருந்துபார்! நீஇம் மண்ணில்
படும்பாடு நாளை பார்ப்பேன்...!
பார்த்தே நான் உலகு நீப்பேன்!