எங்கள் தாய்

தொன்று நிகழ்ந்த தனைத்தும் உணர்ந்திடு
சூழ்கலை வாணர்களும்-இவள்
என்று பிறந்தவள் என்றுண ராத
இயல்பின ளாம்எங்கள் தாய்.

யாரும் வகுத்தற் கரிய பிராயத்த
ளாயினு மேயெங்கள் தாய்-இந்தப்
பாருள்எந் நாளுமோர் கன்னிகை என்னப்
பயின்றிடு வாள் எங்கள் தாய்.

முப்பது கோடி முகமுடை யாள்உயிர்
மொய்ம்புற வொன்றுடை யாள்-இவள்
செப்பு மொழிபதி னெட்டுடை யாள், எனிற்
சிந்தனை ஒன்றுடையாள்.

நாவினில் வேத முடையவள் கையில்
நலந்திகழ் வாளுடை யாள்-தனை
மேவினர்க் கின்னருள் செய்பவள் தீயரை
வீட்டிடு தோளுடை யாள்.

அறுபது கோடி தடக்கைக ளாலும்
அறங்கள் நடத்துவள் தாய்-தனைச்
செறுவது நாடி வருபவ ரைத்துகள்
செய்து கிடத்துவள் தாய்.

பூமி யினும்பொறை மிக்குடை யாள்பெரும்
புண்ணிய நெஞ்சினள் தாய்-எனில்
தோமிழைப் பார்முன் நின்றிடுங் காற்கொடுந்
துர்க்கை யனையவள் தாய்.

கற்றைச் சடைமதி வைத்த துறவியைக்
கைதொழு வாள்எங்கள் தாய்-கையில்
ஒற்றைத் திகிரிகொண் டேழுல காளும்
ஒருவனை யுந்தொழு வாள்

யோகத்தி லேநிக ரற்றவள் உண்மையும்
ஒன்றென நன்றறி வாள்-உயர்
போகத்தி லேயும் நிறைந்தவள் எண்ணரும்
பொற்குவை தானுடை யாள்.

நல்லறம் நாடிய மன்னரை வாழ்த்தி
நயம்புரி வாள்எங்கள் தாய்-அவர்
அல்லவ ராயின் அவரைவி ழுங்கிப்பின்
ஆனந்தக் கூத்திடு வாள்.

வெண்மை வளரிம யாசலன் தந்த
விறன்மக ளாம்எங்கள் தாய்-அவள்
திண்மை மறையினும் தான்மறை யாள்நித்தஞ்
சீருறு வாள் எங்கள் தாய்.


கவிஞர் : சுப்பிரமணிய பாரதி(3-Feb-12, 9:49 am)
பார்வை : 33


பிரபல கவிஞர்கள்

மேலே