தமிழ் உணர்வு

தமிழென் அன்னை! தமிழென் தந்தை!
தமிழென்றன் உடன் பிறப்பு!
தமிழென் மனைவி! தமிழென் பிள்ளை!
தமிழென் நட்புடைத் தோழன்!
தமிழென் சுற்றம்! தமிழென் சிற்றூர்!
தமிழென் மாமணித் தேசம்!
தமிழ்யான் வாழும் எழில்மா ஞாலம்!
தமிழே என்னுயிர் மூலம்!

என்றன் தமிழுடல் எழவே எழுவான்
எழுதமிழ் வானின் பரிதி!
என்றன் தமிழ்மூச் சென்பது தமிழாம்
எறிவான் இடிபுயல்! அறிதி!
என்றன் தமிழ்நரம் பினிலே பாயும்
எரிதழல் ஆற்றுக் குருதி!
என்றன் தமிழை எவன் பழித்தாலும்
எமன் அவனைத் தொடல் உறுதி!

நான் தமிழனடா! நானொரு தமிழன்!
நாற்றிசையும் இது மொழிவன்!
நான் ஒரு வெறியன் என நகை செய்வோன்
நற்றமிழ் அறியான் இழிஞன்!
நான் உயர்தமிழின் வளமுணர் தமிழன்!
நந்தமிழ் எழயான் எழுவன்!
நான் இழிகழுதை அல்லன்.... வலியன்!
நானிலத்தீர்! இது தெளிமின்!


கவிஞர் : காசி ஆனந்தன்(7-May-11, 6:18 pm)
பார்வை : 41


மேலே