வா தமிழா!

முறங்கொண்டு புலியடித்தாள்
முன்பொருத்தி! அவள் முலையில்
இறங்கிய பால் குடித்தவனின்
இனத்தோனே! அட தமிழா!
மறங்குன்றிப் பொதி சுமக்கும்
மாடானாய்.... சி! பகைவன்
புறங்காலை நக்குகிறாய்!
போடா போ! செத்துப் போ!

என்ன பிறப்போ? அட நீ
ஏன் தமிழன் எனும் பெயரை
உன்னுடலுக் கிட்டாயோ?
உண்மையில் நீ தமிழனோடா?
என்னருமைத் தமிழனெனில்
எழு! பகைவன் உடல்பொழியும்
செந்நதியில் ஆடி எழு!
சிவந்த விழி கொண்டெழடா!

கைநெடுவேற் படை எங்கே?
கணை எங்கே? வில்லெங்கே?
மை நெடுவான் வரையெழுந்த
தோள் எங்கே? மறமெங்கே?
ஐயிரண்டு திசை மோதி
அகன்ற தமிழ் மார்பெங்கே?
வையகமும் வானகமும்
நடுங்க வலம் வா தமிழா!

மூத்தகுடி இராவணனை
முழுதுலகும் புகழ் குவித்த
போர்த்தமிழர் தலைமகனைப்
புலிப்பிறப்பைத் தமிழீழம்
காத்த நெடுங் குன்றத்தைக்
களிகொள்ள நினைந்தொருகால்
ஆர்த்தெழடா தமிழ்மகனே!
அமையட்டும் தமிழரசு!


கவிஞர் : காசி ஆனந்தன்(7-May-11, 6:19 pm)
பார்வை : 30


பிரபல கவிஞர்கள்

மேலே