பாவலரே!
பாவலரே! போலிகளாய்
இருக்கின்றீர்கள்!
கன்னி அருந்தமிழணங்கு
கையிரண்டில் விலங்குடையாள்
கண்ணீர் கண்டும்
செந்நெருப்பு விழிகொண்டு
சிறியெழ மாட்டீரோ?
சிச்சி! வானில்
புண்ணிருந்தாற் போலிருக்கும்
நிலாவினையும் காதலையும்
புனைகின்றீரே!
பொங்கு வெறித் தமிழ்கொண்டு
போர்க்களத்தே ஒளவையெனும்
பூவை அந்நாள்
செங்குருதி குளித்திருந்த
தமிழ்மன்னர் சிறப்பெல்லாம்
கவிதை ஆக்கிச்
சங்க மணித் தமிழ்தந்தாள்....
அட நீங்கள் தாய்த்தமிழை
மறந்து நாட்டில்
தெங்கிளநீர் முலைபாடித்
திரிகின்றீர்... கவிஞர்களா?
செத்துப் போங்கள்!
ஊர் பற்றி மொழி பற்றி
ஒரு பொழுதேனும் நீவிர்
உணர்கின்றீரா?
தீ பற்றி எரிகின்ற
வீட்டினிலே இசைபாடிச்
சிரிக்கின்றீர்கள்?
வாய்பற்றி எரியாதா?
தமிழன்னை மனம் நொந்து
வயிறெரிந்தால்
நீர்பற்றும் எழுத்தாணி
நொறுங்காதா? விளையாடல்
நிறுத்துமின்கள்!
சொல்லடுக்கிச் சொல்லடுக்கி
நீர் சொரிந்த பாடலெல்லாம்
போதும்.... மாற்றார்
பல்லுடைத்து நமக்குற்ற
பழிதுடைக்க நாலுகவி
படைப்பீர்... ஓடி
வில்லெடுத்து வேலெடுத்துத்
தமிழிளைஞர் வெளிக்கிளம்ப
நெருப்பு வீசும்
சொல்லெடுப்பீர்... பாவலரே!
இல்லையெனில் தொழில் விடுங்கள்
அதுவும் நன்றே!
பிரபல கவிஞர்கள்

தபு ஷங்கர்
Thabu Shankar

ஞானக்கூத்தன்
Gnanakoothan

வ. ஐ. ச. ஜெயபாலன்
V. I. S. Jayapalan

கனிமொழி
Kanimozhi
