பேயன்

அருவண்ணத் தமிழ் மண்ணில்
ஆரியனை முன்போர் நாள்
வருக என அழைத்திங்கே
வாழ்வித்த முதுதமிழன்
சுருள்குடுமி ஆரியனின்
சூழ்ச்சிக்கே பலியானான்.....
பெருமனத்தால் கெட்ட
பேயனுக்குப் பேர்தமிழன்!

கருநெஞ்சன் வங்கத்தான்
கயவன் விசயனென்பான்
வருபோதில் இலங்கைமண்
வாசல் திறந்துவைத்த
உருகுவிழல் மனத்தமிழன்
ஒளிஈழம் பறிகொடுத்தான்....
பெருமனத்தால் கெட்ட
பேயனுக்குப் பேர்தமிழன்!

அரு ஞாலத் திசையெல்லாம்
அங்கெல்லாம் இங்கெல்லாம்
கருகி உழைத்து வளம்
கனிவித்த உயர் தமிழன்
எருவாகிப் பிறன்வாழ்வை
எழிலாக்கித் தான் மாய்ந்தான்...

பெருமனத்தால் கெட்ட
பேயனுக்குப் பேர்தமிழன்!

திருவோங்கு பாரதம்
தெய்வமென்றும் சிங்களம்
தருசுகமே சுகமென்றும்
தனை மறந்த பெருந்தமிழன்
ஒருநாடு தனக்கின்றி
ஊர் ஊராய் உதைபட்டான்....
பெருமனத்தால் கெட்ட
பேயனுக்குப் பேர்தமிழன்!

அருளாளன் எந்தமிழன்
அனைத்தூரும் ஊரென்றான்...
எருமை இவனை ஒருவன்
"ஏ! கள்ளத் தோணி" என்றான்!
பொருமி எழா இழிதமிழன்
பொறுத்திருப்போம் என்றானே....
பெருமனத்தால் கெட்ட
பேயனுக்குப் பேர்தமிழன்.


கவிஞர் : காசி ஆனந்தன்(7-May-11, 6:29 pm)
பார்வை : 17


பிரபல கவிஞர்கள்

மேலே