அவளின் பார்வைகள்

காயங்களுடன்
கதறலுடன் ஓடி
ஒளியுமொரு பன்றியைத்
தேடிக் கொத்தும்
காக்கைகள்

தொலைவில் புணரும்
தண்டவாளங்கள்
அருகில் போனதும்
விலகிப் போயின


கைகள் காதலித்த
கண்ணாடி தம்ளர்
காதலை ஏற்காதென்
காலடியில்
நொறுங்கிச் சிதறியது
உடைந்த துகள்கள்
காலில் குத்தி
உறவாகி விட்டன
என் ரத்தத்தோடு


எச்சியிலைத் தொட்டியில்
ஏறிவிழும்
தெருநாயின்
லாவகம் எனக்கொரு
கவிதை தரப்பார்க்கிறது


கரித்துண்டொன்றை
தரையில் பைத்தியக்
கிறுக்கலாய்ப் படம்
போட்டுச் சாகடிக்கிறேன்
எரித்துக்கொள்வதைவிட இது
எவ்வளவோ மேல்


கூட்டிலிருந்து
தவறிவிழுந்த
குஞ்சுப்பறவை
தாயைப் போலவே
தானும் பறப்பதாய்
நினைத்தது
தரையில் மோதிச்சாகும்
வரை

அந்திக்கருக்கலில்
இந்தத் திசை தவறிய
பெண் பறவை
தன் கூட்டுக்காய்
தன் குஞ்சுக்காய்
அலைமோதிக் கரைகிறது
எனக்கதன்
கூடும் தெரியும்
குஞ்சும் தெரியும்
இருந்தும்
எனக்கதன்
பாஷை புரியவில்லை

என்ன செய்தும்
இவன் காலடியில்
தலைவைத்துப் பணிய
மறுக்கிறது நிழல்
இவனின் நிழல்


தூண்டில் மீனின்
துடிப்புகளைப் பாடுவதற்காய்
மட்டுமே நான்
ஆற்றோரம் காத்திருக்கிறேன்
அரை நிர்வாணிகளுக்காயில்லை


ஒப்பனைகளை
அழித்துவிட்டு
என்னுடைய
நாடகத்தை
நானே
என்று பார்க்க


ஒரு
தென்னம்பிள்ளையின்
கீழ்
சில கனகாம்பரம்
ஒரு செம்பருத்திச் செடி
எனத் தோட்டம் வளர்த்து
தண்ணீர் பாய்ச்சுகிற
தம்பியின்
மத்யான நிழல் மகிழ்ச்சிகளை
உன்னால்
அவனின் பரிமாணப் பிரக்ஞை
வெளித் தெரிய
கவிதையாக்க முடிகிறதா

எப்படியென்று
தெரியவில்லை
தாமரையிலையில்
நரகல்

அத்தனை
தூரம்
கடந்து
பார்க்க
வந்திறங்கினேன்
கூப்பிடும் தூரத்தில்
எதிர்த்திசையில்
பஸ் ஏறப்போகிறான்
கூப்பிடவில்லை


என் தலைக்குள் வலி

“தொடந்து மழை நாட்களில்
தொழுவம் விட்டகல
மறந்த பன்றிகளும்
காய்ந்து
மக்கிப்
போக முடியாத
மந்தை நரகல்களும்”
என்றொரு படிமம்
திணிந்து கொண்டு


கவிஞர் : கலாப்ரியா(2-Nov-11, 6:33 pm)
பார்வை : 183


பிரபல கவிஞர்கள்

மேலே