தந்தாலே காதல் காதல் இல்லை
தருகின்ற பொருளாய் காதல் இல்லை
தந்தாலே காதல் காதல் இல்லை
யாசகமா காதல்?
நான் கேட்கவும்
நீ கொடுக்கவும்.
உன் வெட்கமும்
என் கர்வமும்
பலியாகும்
யாகம் காதல்.
எடுத்தேன்
கொடுத்தேன்
காதலல்ல.
பூவுக்கு வண்டைப்போல
வண்டுக்குப் பூவைப்போல
எடு தேன்
கொடு தேன்
காதல்.
தவத்தில் விளையும்
வரமே காதல்.
தாடிவைத்த
இளைஞரெல்லாம்
தவம் கலைத்த
ஞானிகள்.
தேடலில் விளையும்
தெளிவு காதல்.
உன்னில் என்னையும்
என்னில் உன்னையும்.
உன் பேரைக்கேட்டால்
நான் திரும்பிப் பார்ப்பது
என் பேரைக் கேட்டால்
நீ பூமி பார்ப்பது.
கவிதை தாங்கிய
காகிதமல்ல காதல்
காகிதம் காணா
கவிதைகளே காதல்.
வேண்டிப் பெறுவதா காதல்?
வேள்வியில் பெறுவது காதல்.
முத்தத் தீயில்
முனகல் மந்திரங்கள்
தானமல்ல காதல்.
தாகம்.
தீரத் தீரத்
தீரா தாகம்.
காதல்,
நிகழ்வல்ல
இருப்பு.
நீ நானாகவும்
நான் நீயாகவும்.
நீ வென்றபோதும்
நானே வெல்கிறேன்.
நீ தோற்றபோதும்
நானே தோற்கிறேன்.
நீ தோற்பதில்லை
நான் வெல்வதில்லை
இதுதான் காதல்.
எனை ஏற்றுக்கொள்
என்பதில்லை காதல்.
உனை ஏற்றுக்கொள்
என்பது காதல்.
நான் நீயாகவும்
நீ நானாகவும் மாறுவது
கொடுக்கல் வாங்கலா?
பருவகால உருமாற்றம் அது,
மனப்பிணைப்பில் உயிர்மாற்றம் அது.
மரங்கள் இலைகளை உதிர்ப்பதுபோல
என்னை உதிர்க்கிறேன்
மீண்டும்
நீயாய் துளிர்க்கிறேன்.
இது நீ தந்ததா?
நான் ஆனது.
நாம் ஆனது.
தந்தாலே காதல் காதலில்லை.