காதற் கடிதங்கள்

காதலியியின் கடிதம்

என் அன்பே,
இங்குள்ளார் எல்லோரும்
சேமமாய் இருக்கின்றார்கள்;
என் தோழியர் சேமம்!
வேலைக்காரர் சேமம்! இதுவுமன்றி
உன்தயவாம் எனக்காக உன்வீட்டுக்
களஞ்சியநெல் மிகவுமுண்டே,
உயர் அணிகள் ஆடைவகை ஒவ்வொன்றில்
பத்துவிதம் உண்டு. மற்றும்
கன்னலைப்போல் பழவகை பதார்த்தவகை
பட்சணங்கள் மிகவுமுண்டு.
கடிமல்ர்ப்பூஞ் சோலையுண்டு. மான் சேமம்.
மயில் சேமம். பசுக்கள் சேமம்.
இன்னபடி இவ்விடம்யா வரும் எவையும்
சேமமென்றன் நிலையோ என்றால்,
'இருக்கின்றேன்; சாகவில்லை' என்றறிக.

இங்ஙனம் உன்,
எட்டிக்காயே

காதலன் பதில்

செங்கரும்பே,
உன்கடிதம் வரப்பெற்றேன்.
நிலைமைதனைத் தெரிந்து கொண்டேன்.
தேமலர்மெய் வாடாதே! சேமமில்லை
என்றுநீ தெரிவிக் கின்றாய்
இங்கென்ன வாழ்கிறதோ? இதயத்தில்
உனைக்காண எழும்ஏக் கத்தால்,
இன்பாலும் சர்க்கைரையும் நன்மணத்தால்
பனிக்கட்டி இட்டு றைத்த
திங்கள் நிகர் குளிர்உணவைத் தின்றாலும்
அதுவும் தீ! தீ! தீ! செந்தீ!
திரவியஞ்சம் பாதிக்க இங்குவந்தேன்.
உனை அங்கே விட்டுவந்தேன்!
இங்குனைநான் எட்டிக்காய்
என நினைத்ததா யுரைத்தாய்; இதுவும் மெய்தான்.
இவ்வுலக இன்பமெலாம் கூட்டிஎடுத்
துத்தெளிவித் திறுத்துக்காய்ச்சி
எங்கும்போல் எடுத்துருட்டும் உருட்சியினை
எட்டிக்காய் என்பா யாயின்
எனக்குநீ எட்டிக்காய் என்றுதான்
சொல்லிடுவேன்

இங்கு‎,
அ‎ன்பன்


கவிஞர் : பாரதிதாசன்(4-Jan-12, 3:47 pm)
பார்வை : 31


மேலே