மனப் பெண்
மனமெனும் பெண்ணே!வாழிநீ கேளாய்!
ஒன்றையே பற்றி யூச லாடுவாய்
அடுத்ததை நோக்கி யடுத்தடுத் துலவுவாய்
நன்றையே கொள்ளெனிற் சோர்ந்துகை நழுவுவாய்
விட்டுவி டென்றதை விடாதுபோய் விழுவாய் 5
தொட்டதை மீள மீளவுந் தொடுவாய்
புதியது காணிற் புலனழிந் திடுவாய்
புதியது விரும்புவாய்,புதியதை அஞ்சுவாய்
அடிக்கடி மதுவினை அணுகிடும் வண்டுபோல்
பழமையாம் பொருளிற் பரிந்துபோய் வீழ்வாய் 10
பழமையே யன்றிப் பார்மிசை யேதும்
புதுமை காணோமெனப் பொருமுவாய்,சீச்சீ!
பிணத்தினை விரும்புங் காக்கையே போல
அழுகுதல்,சாதல்,அஞ்சுதல் முதலிய
இழிபொருள் காணில் விரைந்ததில் இசைவாய். 15
அங்ஙனே,
என்னிடத் தென்று மாறுத லில்லா
அன்புகொண் டிருப்பாய்,ஆவிகாத் திடுவாய்,
கண்ணினோர் கண்ணாய்,காதின் காதாய்ப்
புலன்புலப் படுத்தும் புலனா யென்னை 20
உலக வுருளையில் ஓட்டுற வகுப்பாய்,
இன்பெலாந் தருவாய்,இன்பத்து மய்ங்குவாய்,
இன்பமே நாடி யெண்ணிலாப் பிழை செய்வாய்,
இன்பங் காத்துத் துன்பமே யழிப்பாய்
இன்பமென் றெண்ணித் துன்பத்து வீழ்வாய், 25
தன்னை யறியாய்,சகத்தெலாந் தொளைப்பாய்,
தன்பின் னிற்குந் தனிப்பரம் பொருளைக்
காணவே வருந்துவாய்,காணெனிற் காணாய்,
சகத்தின் விதிகளைத் தனித்தனி அறிவாய்,
பொதுநிலை அறியாய்,பொருளையுங் காணாய் 30
மனமெனும் பெண்ணே!வாழிநீ கேளாய்!
நின்னொடு வாழும் நெறியுநன் கறிந்திடேன்;
இத்தனை நாட்போல் இனியுநின் னின்பமே
விரும்புவன்;நின்னை மேம்படுத் திடவே
முயற்சிகள் புரிவேன்;முத்தியுந் தேடுவேன்; 35
உன்விழிப் படாமல் என்விழிப் பட்ட
சிவமெனும் பொருளைத் தினமும் போற்றி
உன்றனக் கின்பம் ஓங்கிடச் செய்வேன்.