இரண்டாம் முறையாக இறந்தான்!!
இரண்டாம் முறையாக
இறந்தான் _
புரட்சிக்கவி
பாரதிதாசன்...
உவமைக்கவிஞன் சுரதாவின்
உயிர்நீப்பில்;
இனி _
இவ் வையம்
வழுத்தும் வண்ணம் _ ஓர்
எழுத்து விருட்சம்...
தழைப்ப தேது
தமிழ்த் தோப்பில்?
அவன் உரைக்காத
உவமையில்லை ;
அவனுக்குத்தான்
உவமையில்லை!
வாழ்ந்த
வாழ்வறியாது ;
வாழவும்
வழியறியாது ;
வண்டமிழர் தொண்டை
வறண்டு கிடக்க _
அவன்தான்
அவர்களது....
விக்கல் தீர்த்த _
சிக்கல் தீர்த்தம் ;
சிக்கல்
சிங்காரவேலன் _
தமிழ்க் கடவுள் எனில் _ அவன்
தமிழ்க் கடவுளின் மற்றொரு மூர்த்தம்!
சுரதா! கவி
வரதா!
நீதான்
நீண்ட காலத்திற்குப் _
பகுத்தறிவுப்
பயிர் _
விளைவதற்கான
விதை நெருப்பு ;
விதை நெருப்பை விழுங்குவதோ
சிதை நெருப்பு?
உன்
உத்தம மகன்...
கல்லாடன்
கண்ணீரைத் _
துடைக்க என்னிடம் இல்லை
துவாலை ; அது
கண்ணீரல்ல _
கனலும் சுவாலை!
தகவுசால்
தமிழ் மக்களே! இனி...
வருடா
வருடம்
வரும் வான்மழை ;
வாராது தேன் மழை!