வண்டு வந்தது ஏனடி?

*"ஓங்குமலை நாட ஒழிகநின் வாய்மை
காம்புதலை மணந்த கல்தர்ச் சிறுநெறி
உறுபகை பேணாது இரவில் வந்திவள்
பொறிகிளர் ஆகம் புல்லத் தோள் சேர்பு
அறுகாற் பறவை அளவில மொய்த்தலிற்
கண்கோ ளாக நோக்கிப் பண்டும்
இனையை யோவென வினவினள் யாயே
அதனெதிர் சொல்லாளாகி அல்லாந்து
என்முக நோக்கி யாளே அன்னாய்
யாங்குணர்ந் துய்குவள் கொல்லென மடுத்த
சாந்தம் ஞெகிழி காட்டி
ஈங்கா கினவால் என்றிசின் யானே."

(நற்றிணை:பாடல்:55 பாடியவர்:பாண்டியன் பெருவழுதி)

பொருள் விளக்கம்:
காம்புதலை மணந்த=மூங்கில்கள் நெருங்கிய
கல்அதர்ச் சிறுநெறி=கற்பாறை மிகுந்த சிறியவழி
உறுபகை=(இந்த இடத்தில் வேங்கையின் பகையெனப் பொருள்படும்)
பொறி=அழகிய தேமல்
ஆகம்=மார்பு
அறுகாற்பறவை=வண்டு
கண்கோளாக நோக்கி=கொல்வது போலப் பார்த்து,
இனையையோ=இன்ன காரணமோ,
அல்லாந்து=வருந்தி
சாந்தம்=சந்தனம்
ஞெகிழி=எரியும் விறகு

பழத்துக்குள் சிறையிருக்கும் விதையைப்போல்
பருவப்பாவையினை வீட்டுக்குள் பாதுகாத்தாள் அன்னை; அந்தக்

கிழத்துக்குக் காதுகுத்தி; மெல்ல, அருகிருக்கும்
குளத்துக்குச் செல்வதாகக் குமரிப்பெண் கூறிவிட்டு,

அடக்கத்தின் உருப்போல நடந்து காட்டி; அன்னை முகம் மறைந்தவுடன்
அங்குள்ள மலையருவி தேங்குகின்ற குளம் தேடி ஓடிடுவாள்!

களத்துக்கு வருகின்ற கேடயத்தை முத்தமிடக்
காத்திருக்கும் வீரன் கை வாள் போலக்

காளையவன் காத்திருப்பான் கண்மணியின் வரவு நோக்கி!
தோளைத் தழுவுகின்ற மாலையாக அவளும் தொத்திக் கொள்வாள்!

"களவொழுக்கம் தீதாகும்; அன்னைக்கும் அலர்தூற்றும் ஊரார்க்கும்;
காதில் பட்டவுடன் கடும் எதிர்ப்பு மூண்டுவிடும் - அதனாலே
அளவோடு இருக்கட்டு"மென்று அவள்தோழி அடிக்கடி குறுக்கிட்டு
ஆயிரம் முறை தடுத்திட்டாள்; அவள் அதனைக் கேட்டால்தானே!
அன்றொருநாள் அருவிக்குளம் போவதாக அன்னைகாதில் பூ சுற்றிவிட்டு
குன்றோரம் முகிலிரண்டு ஒன்றானதுபோல் ஆகிவிட்டார் அவளும், அவனும்!

"பொறிகிளர் ஆகம் புல்லத் தோள் சேர்பு" எனப்
புலவர் வழுதியார் எழுத்தில் பொறித்தது போல;

அழகிய மார்புகள் இரண்டும் அழுந்தத் தழுவி மகிழ்ந்து
பழச்சுவை முத்தம் பத்து, நூறு, ஆயிரமெனப் பகிர்ந்து கொண்டனர்!

அடுத்தநாள் காலை அடுக்களைப்பக்கம் அன்னையிருந்தனள்
எடுத்தும் கொடுத்தும் இட்டபணிகளைச் செய்ய மகளும் சென்றனள்!

ஆரத்தழுவி அருவியோரம் நடந்ததொரு நிகழ்ச்சியால்
அரிவையின் தோளில் வீசய நறுமணமுணர்ந்து,

அவளையே சுற்றிப் பறந்தன வண்டுகள்!
அன்னையும் அதனைப் புரிந்து கொண்டனள்!

"என்னடி பெண்ணே; சொல்லடி எனக்கு
உன்னடி தவறி எவன் மீது வீழ்ந்தனை?" என்றாள்!

வண்டுகள் மொய்த்தலால் காதற்கள்வனின் செயலைக்
கண்டு கொண்டனளே அன்னையென்று; பூச்

செண்டுகள் இரண்டையும் துகிலால் மறைத்தாள்,
மண்டிய பற்குறி நகக்குறி தெரியாதிருக்க!

வாய்மூடி ஆட்டம் காட்டாதே மகளே; உனையீன்றுப் பாதுகாக்கும்
தாய்தான் கேட்கின்றேன், நடந்ததைச் சொல் என்றாள்! தணலானாள்!

இனி அவளைத் தப்புவிக்க ஏற்றதொரு பொய்தான் தேவையென
இனியவளாம் அவள்தோழி வெடுக்கெனப் பாய்ந்து வந்து;

"அன்னையே கேள் நீ; அறியாமல் அவள்மீது பழிதூற்றுகின்றாய்
அடுப்பினிலே சந்தன விறகுகளை வைத்து எரிப்பதாலே

அடுக்களைக்குள் அந்தமணம் பரவியெங்கும் படர்ந்துள்ளது
அடுக்கடுக்காய் வண்டுகளும் அதனால்தான் பறக்குதம்மா!

அஃதன்றி அன்னை நீ ஐயுறுதல் போலே; நீ பெற்ற
அருமை மகள் ஆடவர் எவரையுமே ஏறெடுத்துப் பார்த்ததில்லை!

ஆணையிட்டுக்கூட நான் சொல்வேன்; அது தேவையில்லை எனக் கருதுகின்றேன்! இந்த
வீணையினை மீட்டுதற்கு உன் விழி மூலம் இசைவுதனைப் பெறுவதன்றி; இவளைக்

காதலிக்கும் திருமகன் இவள்மீது மறந்தும்கூட
கைகளையே வைப்பதற்கும் ஒப்பமாட்டாள்; இது உண்மை" என்றாள்!

தாயாரும் நம்பிவிட்டாள்; அடுப்பின் நெருப்புத்
தணலாலே சந்தன விறகுதான் மணக்குதென்றும்

தங்க மகள் தவறொன்றும் செய்யமாட்டாள் என்றும்
அங்கமெலாம் பூரிக்க அவள் உச்சிமோந்து முத்தமிட்டாள்!

இப்படி வீட்டுக்குள் நடந்த கதையினையே - தலைவியின்
சொற்படி தோழிசென்று தலைவனுக்குரைத்து நின்றாள்.

"மூங்கில் நிறை பாறைமிகு பாதைகளில்
வேங்கைகளின் நடமாட்டம் கண்டும் பதறாமல்;

ஓங்குபுகழ் நாடனே! நீ ஒவ்வொருநாளும் வந்து
ஏங்குகின்ற தலைவிதுயர் துடைக்கின்றாய்; நன்று!

ஆங்கவளோ அன்னையிடம் படும்பாடு நீ அறிந்திலையோ?
பாங்கிநான் ஒருகேள்வி கேட்கின்றேன் பதறிடாதே!

திருமணநாள் குறிப்பதாக தினந்தோறும் கூறுகின்றாய்;
தேன் என்று சொல்லிவிட்டால் இனித்தா விடும்?

தேர்ந்திடுவீர் ஒருநாளை; இருவருமே வாழ்வில் துணையாக
சேர்ந்திடுவீர் பெற்றோர் உற்றாரின் வாழ்த்தோடு!

இல்லையெனில் இந்த மலைநாட்டு மாவீரன்பால்
இல்லையென்றாகிவிடும் வாய்மை! வாய்வீரம் மட்டும்தான் மிஞ்சும்!" என்றாள்.

"முல்லையிடம் கூறிவிடு; பெண் கேட்க நாளை என் பெற்றோர் வந்திடுவர்!
கொல்லை வழிச் சந்திப்பு எனும் தொல்லைக்கே இனி இடமில்லை!" என்று சொல்லி;

நடந்திட்டான் மலைநாடன்; அவன் சொன்னதுபோல்
நடந்திருக்கும் திருமணமும்!


கவிஞர் : கருணாநிதி(18-Mar-11, 10:56 pm)
பார்வை : 162


மேலே