தேனாகச் சொட்டும்; தேளாகக் கொட்டும்!

* "பரந்துபடு கூர்எரி கானம் நைப்ப
மரந்தீயுற்ற மகிழ்தலை அம் காட்டு
ஒதுக்கு அரும் வெஞ்சுரம் இறந்தனர் மற்றவர்
குறிப்பின் கண்டிசின் யானே நெறிப்பட
வேலும் இலங்குஇலை துடைப்பப் பலகையும்
பீலி சூட்டி மணிஅணி பவ்வே
பண்டினும் நனிபல அளிப்ப இனியே
வந்தன்று போலும் தோழி நொந்து நொந்து
எழுது எழில் உன் கண்பாவை
அழிதரு வெள்ளம் நீந்தும் நாளே"

(நற்றிணை: பாடல்:177)
பாடியவர்:(பெயர் தெரியவில்லை)

பொருள் விளக்கம்
கூர்எரி=மிகுந்த தீ. கானம்=காடு, நைப்ப=அழிந்துபட. ஒதுக்கு அரும் வெஞ்சுரம்= ஒதுங்குதற்கு நிழலுமில்லாத வெம்மையான நிலப்பகுதி. இறந்தனர்=சென்றனர். பலகை=கேடகம் அல்லது கேடயம். பண்டினும் நனிபல அளிப்ப=முன் போலன்றி என்னிடம் அளவிலா அன்புகாட்டி

தோழி:
என்னடி நேற்று விடியுமட்டும் வளையல் சத்தம்?
எத்தனை கொடுத்தான்? நூறா, ஆயிரமா; நீ பெற்ற முத்தம்?
இமை மூட முடியாமல் நான் பட்டபாடு கொஞ்சமா?
இடி முழக்கம் எழுப்பியதே; அதுவும் ஒரு மஞ்சமா?
சத்தம் போடாதவாறு கட்டில் வாங்க உன் வீட்டில் என்ன பஞ்சமா?
சத்தியமாய்ச் சொல்லடி தலைவி; என்மீது உனக்கேதும் வஞ்சமா?
திண்ணையில் ஒருத்தி படுத்திருக்கிறாள் என்பதும் தெரியாதா?
திருமணமாகாத பருவமங்கை அவள் என்பதும் புரியாதா?
ஒருநாள் மட்டுமே இந்த உலகம் இருக்குமெனக் கணக்கிட்டு இன்பத்
திருநாள் முழுவதையும் நடத்தி முடித்துவிட்டீர்; வாழ்க! வாழ்க!
இருந்தாலும் என்னுயிர்ப்பாவாய் ஒன்று கேட்பாயா? - இரவு,
விருந்துண்ட மகிழ்ச்சியிலே எனக்கும் சிறிது செவி கொடுப்பாயா?
மாம்பழம் இனிக்குதென்று மரத்தோடு பிடுங்கலாமா?
மலர் மணம் இனிமையென்று கொடியோடு பெயர்க்கலாமா?
அள்ளிப் பருகி நீரைத் தாகம் தணித்தலன்றி - ஆற்றின்
வெள்ளத்தோடு வீழ்ந்தருந்தி அறிவுடையோர் மிதப்பதுண்டோ?

"இன்பத்தைப் பற்றி உனக்கென்ன தெரியும்?" - என்று என்னை
எடுத்தெறிந்து பேசாமல் எதுவும் அளவு மீறினால் எழுகின்ற
துன்பத்தைப் பற்றித் தொலைநோக்கில் சிந்தித்திடுக!
தோழியுங்கள் இருவர் நன்மைக்கே சொல்லுகின்றாள்; எனக் கொண்டிடுக!

இரும்பினால் வார்த்ததல்ல மாந்தர் மேனி; எனவே
கரும்புதான் காம இன்பம் எனினும் அதனை;
விரும்பும்போதெல்லாம் கண்டபடி சுவைத்துத் திளைத்தால்
துரும்பு போல் இளைத்துப் போகும் ஆண் பெண் வடிவிரண்டும் வளைந்து கூனி!
உடற்கூறு வல்லுநர் என் பாட்டியம்மை; அவள் பிறர்க்கு
உரைக்கின்ற வாழ்க்கை முறையை ஒளிந்திருந்து தினமும் கேட்டு நான்;

உணர்ந்துகொண்ட உண்மையைத்தான் - என்
உற்ற தோழியாம் தலைவி உனக்குச் சொன்னேன்!

ஆறு திங்களுக்கு மேலாக உனை விடுத்து அகலாமல் - உன்
ஆளன் அருகில்தானே இருக்கின்றான்;
அப்படியென்னடி வந்தது நேற்று மட்டும் தோழி? உங்களிருவரையும்
அணைபோட்டுத் தடுக்கத்தான் அவசரமாய்க் கூவியதோ கோழி?

தலைவி:
கூவியது நிச்சயமாய்க் கோழியல்ல என்பதை - என்
ஆவிநிகர்க் கண்ணாளன் நன்றாகப் புரிந்துகொண்டு
"குரல்மாற்றி உன் தோழிதான் இப்படிக்
குறும்புத்தனம் செய்கின்றாள்" எனக் கூறிவிட்டான்! அந்தத்
திறல் மறவன் பிடிக்குள்ளே சிக்கிவிட்டால்
குறள் பாட்டின் ஈரடிபோல் இணைந்துதான் கிடக்கத் தோன்றும்! அதுவும்;
அறம் பொருள் இரண்டும் கடந்த இன்பத்துப்பால் என்னும் போது; அவனைப்
புறம் தள்ளி பிரிந்து வரல் எனக்கு ஆகின்ற காரியமா?
காலம் இன்னும் இருக்குதடி கண்மணியே, கதிர்மலர; - எனக் கூறிக்
கோலம் வரைந்தான் விரல் நுனியால் என் உச்சி முதல் உள்ளங்கால் வரையில்!
விரல்பட்டால் யாழின் நரம்பு இசையோடுதானே துடிக்கும் - அவன்
கரம் பட்டுச் சுகஉலகச் சுற்றுலாவில் பறந்தேன்! - இதுவரையில்;
காணாத இன்பத்தில் எனைநானே மறந்தேன்!
காலைக்கதிர் உதித்தபிறகுதானடி - அந்தக்
கள்வனின் செயலுக்கெல்லாம் காரணத்தை அறிந்தேன்!

இமை நான்கை இதழ்போலக் கவ்விக் கொண்டு - அவனளித்த
சுவை முத்தம் அத்தனையும் தேனூறிய கற்கண்டு!

இடை வளைத்துக் கொடிபோல அவன் தோள்மீது சுற்றிக் கொண்டான்.
"இனி அணுப்பொழுதும் எனைப்பிரியாதே" என அவனை நான் பற்றிக் கொண்டேன்!

தோழி:
போதுமடி; பொற்கொடியே; பொற்கொடியே! எனக்கும் நீ
போதை ஏற்றிவிடாதே! பிரிந்தென்னைப்
பொருள் தேடப் போயுள்ள காதலன் வரும்வரையில்
பொறுத்திருக்கும் என் மனத்தை
வறுத்தெடுத்துத் தொலைக்காதே; எனை
வாடவிட்டு வேடிக்கை பார்க்காதே!

தலைவி:
களிப்பிலாடும் கானமயிலாகி - எதையும்
ஒளிப்பின்றி உன்பால் உரைத்து விட்டேனடி
கண்ணயர்ந்து நீ இரவெல்லாம் தூங்காததை - அவனோடு
விண்ணுயர்ந்து பறந்ததாலே நான் உணர முடியவில்லை!
தலைவியென்றும் தோழியென்றும் தகுதி பிரித்து நாம் பழகவில்லை!
அலைகடல் போல் பரந்ததன்றோ நமது நட்பு; அதனாலே மன்னித்திடுக!
விடியும்வரை நேற்றிரவு மட்டும் இன்ப விளையாட்டு ஏனென்று
வினவினாயே; அதற்கு நானுந்தான்
விடை கிடைக்காமல் வியப்புற்றேன் எனினும்
விருந்து வலிய வலிய வரும்போது வீணில்
அருந்தாமல் தட்டிக்கழிக்க மனமின்றி
இரவுக்கு வாழ்த்துச் சொல்லி - இடைவிடா
உறவுக்கு எனையளித்துச் சுகம் கண்டேன்.
கிழக்கினில் சூரியன் எழுந்தபின் தானே;
வழக்குக்கு மாறாக இரவு நடந்த கதைக்கு;
விளக்கத்தைப் புரிந்து கொண்டேன் - மனக்
கலக்கத்தால் தவித்து நின்றேன்!

தோழி:
புதிர் போட்டுக்கொண்டே இருக்கின்றாய் தலைவி;
கதிர் வந்தபின்னர் கவலை ஏன் உனக்கு?
எதிர் நின்று இரவெல்லாம் ஈடுகொடுத்த நீ; இப்போது
அதிர்கின்ற அளவுக்குக் கண்ட காரணம்தான் என்ன?

தலைவி:
அதோ பாரடி; அவனை!
வேல் முனையைத் துடைத்துக் கூரேற்றியவாறு
வீரர்களை அழைத்து விரைவுபடுத்துகின்றான்!
மயிற்பீலி சூட்டி மணியும் அணிவித்து
மலையொத்த தோளிரடைக் குலுக்கிக்கொண்டே
ஆடவர்க்கிடையே ஓர் அடலேறு போல
கேடயத்தைத் தாங்கி எனை நோக்கி வருகின்றான்!
இச்சையில்லை உயிர்மீது என்ற துணிவுடனே
கச்சை கட்டிக் கவசம் பூண்ட அந்தக் காளையினைக் காண்க!
இரவெல்லாம் துயில் கொள்ளாத உன் கண்ணால் பாரடி!
இனி எந்தன் கண்களுக்குத் தூக்கமுண்டோ கூறடி!
பரந்து பட்ட தீயினால் காடழியப்
பாலையாய் மாறிவிட்ட நிலங்கடந்து
இறந்துபடினும் இந்நாடு காப்போம் எனும் உறுதியுடன் உற்றாரைத்
துறந்து செல்லும் படை வீரர் பல்லாயிரத்தோர்

நடந்து செல்கின்றார்; போர்க்களம் நாடி! அவனும்
விரைந்து வருகின்றான் விடைகேட்க எனைத் தேடி!
புரிந்ததா உனக்கு இப்போது - இரவு அவன்;
புரிந்திட்ட செயலுக்கெல்லாம் பொருள் விளக்கம்?
இன்பவெள்ளத்தில் மிதந்ததாக எனைக்கடிந்து
எரிந்து விழுந்தாயே; எனைப் பார் தோழி!

இமையிரண்டில் வெள்ளம் கரைபுரண்டு - என்
இருவிழியின் பாவைகளும் மறைந்துருண்டு
இரவு கண்ட இன்பமெல்லாம் செலவுக்கணக்காகி;
வரவுக்கணக்கில் துன்பம்; தொகை தொகையாய்
இப்போதே வரப்போகும் காட்சியினைப்பார்!
தப்பாது நடந்ததடி நான் கணித்த குறிப்பு!

நாடகத்தை நன்றாக நடத்தியுள்ளான் விடியுமட்டும்; என்
ஆடகப் பொன்மேனியினை ஆரத்தழுவி அமுதமூட்டியபின்
இடர்விளைத்துப் பிரிந்து சென்று என் நெஞ்சத்தைப் பிழிந்தெடுக்க
சுடர் முகம் தூக்கியவன்; சூழ்ந்து வரும் பகை எதிர்க்கக் கிளம்பிவிட்டான்!

படை நடத்தப்போகின்றேன் கண்ணே
பகைவர்களின் சூழ்ச்சியினைச் சுக்குநூறாய்
உடைத்தெறிந்து வாகைசூடி
உனைவந்து காணுகின்றேன் பெண்ணே;
விடைகொடுப்பாய் மானே என்பான்!
அவன் பேச்சென்னவோ தேனாகத்தான் சொட்டும்;
ஆனால் என் இதயத்தில் அது தேளாகவன்றோ கொட்டும்!


கவிஞர் : கருணாநிதி(18-Mar-11, 10:52 pm)
பார்வை : 188


பிரபல கவிஞர்கள்

மேலே