கல்லறை காயாது
சிரித்தபடியேதான் நீ
சாவையும் சந்தித்திருப்பாய் என்பதில்
சந்தேகமில்லை எமக்கு.
சமர்க்கள வீச்சாயினும்
சமாதானப் பேச்சாயினும்
இரண்டிலும்-
சலவை செய்த உன்
சிரிப்பைச் சந்திக்க
எதிரிகளே அஞ்சினார்கள்.
உன்-புன்னகையின் வெண்ணிறமே
புரட்சியின் விடிவெள்ளியாய்த்
தோன்றியது
புலித் தோழர்களுக்கு
அந்தப் - புன்னகைக்குள்ளே ஒரு
புரட்சியே பதுங்கியிருப்பதாகத்
தோன்றியது
பகைவர்களுக்கு.
ஞாலச் சிறப்புக்கு
வான்படையை ஊக்கிய உன்
ஞானச் சிரிப்புக்கு
நடுங்கினான் மகிந்தன்.
கருவிப் போரில் யுத்த தந்திரத்யுைம்
அறிவுப் போரில் ராஜதந்திரத்தையும்
கற்றுச் செரித்த களகர்த்தனே,
எதிரிகள் உன்னைக்
குறிவைக்கக் காரணம்
உன் பெயரின்
முன்பாதியாக இருந்த
மொழிப்பாசம் தானோ?
தமிழீழப் பகைவர்கள்
தமிழுக்கும் பகைவர்களே... எனவே
அன்னைத் தமிழை அழிப்பதாய் எண்ணி
உன்னை அழித்தான்-மிருக மகிந்தன்.
தம்பியின் நெற்றிக்
கண்ணை அழித்தான்; கனவை அழித்தான்
ஈழத் தேசியப்
பண்ணை அழித்தான்; பண்பை அழித்தான்
அனைத்துலக ஜனநாயகர்களும்
அழுது வடித்த கண்ணீர்
ஏழுகடல் கடந்து
இந்துமாக் கடல் கரைந்து
ஈழநாட்டுத் தலைவன் பொழிந்த
இதயச் செந்நீரோடு கலந்து
கிளிக்காட்டில் நடத்திய உன்
வழிபாட்டில்
ஏனோ கசியவில்லை இந்தியம்
இந்தியத்துக்கு இல்லையோ இதயம்?
கவிதாஞ்சலி செலுத்தித்
தமிழ்க்கடனாற்றியமைக்காக
கலைஞரின் அரசையே
அபராதமாகக் கேட்கிறது
ஆரியம்.
நாடு கடத்தும் தன்னுரிமை
நமக்கின்னும் கிட்டாததால்
ஏடு நடத்தி இறுமாந்திருக்கும்
கஸ்லூரிக் கோமகனும்
கோமாளிச் "சோ" மகனும்
சோழவந்தான் உளவாளியும்
வாழவந்த "கலை"வாணியும்
"நூலே"ந்தி நிற்கிறார்கள் -
பொய் எழுதும்
தாளேந்தி விற்கிறார்கள்.
நாற்புறமும் சூழ்ந்துவரும்
பார்ப்பனியத் தாக்குதலின்
பரிணாம வளர்ச்சியே
பாசிசமாயிற்று.
பார்ப்பனம் இங்கே பாசிசமானதுபோல
பவுத்தம் அங்கே பாசிசமாயிற்று
பவுத்தப் பாசிசத்தின் பகைகள்
தமிழ்-தமிழன்-தமிழீழம்
பார்ப்பனப் பாசிசத்தின் பகைகள்
தமிழ்-தமிழன்-தமிழ்த்தேசம்
பாசிசக் கொடுங்கோலில்
ஜனநாயகம் அழிந்தது
"ஜெய"நாயகம் தலைவிரித்தது.
புலிகளுக்காய்ப் போர்ப்பறை
முழக்கியது ஜனநாயகம்
போர்ப்பறையைப் பொடாச்சிறையில்
மூடியது ஜெயநாயகம்
அங்கே-சிங்களத்தில்-
சேனநாயகாவின் வாரிசாகச்
சேனையின் நாயகம் படையெடுத்தது
கொழும்பு வெறியரால் கொல்லப்பட்ட
ஈழக்குடிகள் எத்தனை லட்சம்
என்ற கணக்கு முடியவில்லை
ஆனால்
சிங்களப் பேரினச்
சங்கிலி உடைத்து
ஈழத்தேசம் உதிக்கும் தேதி
எப்போது என்ற கணக்கு
எப்போதோ எழுதி முடிந்துவிட்டது.
அந்த வெற்றிவிழாவில்-
உலக நாடுகள் ஒன்றாய்த் திரளும்
இந்தியாகூட அரங்கில் அமரும்
மகிந்தனுக்கும் ஒரு நாற்காலி இருக்கும்
ஆனாலும அதுகாலியாய் இருக்கும்
குறிபார்த்துக் குண்டுவீச
இடம் காட்டித் தந்துவிட்டு
இங்கிலாந்துக்கு ஓடிப்போன
இனக்குடிலன் - இழிபிறவி
அங்கேயும் உயிர்தப்ப
அலைபாய்ந்து முடிவாக
லண்டன் சிறைக்குள் தஞ்சமடைந்த
ரகசிய ஒப்பந்தங்கள் அம்பலமாயின.
லண்டன் சிறைக்குள் என்ன, நீ
பாதாளச் சிறையிலேயே
பதுங்குமிடம் தேடினாலும்
பாதுகாப்பில்லை உனக்கு
ஏனெனில்-
உன்னைப் பலிபோட இருப்பது
புலிகளல்ல-
ராஜபக்சேவின் ராணுவமே-என்பதைக்
கதிர்காமரிடமே கற்றிருக்க வேண்டும் நீ
கொலைகார மகிந்தனே, குறித்துக்கொள்!
புறாவைக் கொன்றுவிடலாம்;
பூகம்பத்தைக் கொல்ல முடியாது!
தமிழ்ச்செல்வன் குருதியின்
ஒவ்வொரு துளியும் ஒவ்வொரு அணுஉலை!
அவரது கடைசித் துளி ரத்தமும்
தன் கடனை வசூலிக்காமல்
கல்லறையில் ஓயாது.
அதுவரை கல்லறை காயாது.
தணிகை செல்வன்