கவிஞர்கள் தெளித்த பன்னீரும் வடித்த கண்­ரும்!

* "செற்றன்று ஆயினும், செயிர்த்தன்று ஆயினும்,
உற்றன்று ஆயினும், உய்வின்று மாதோ;
பாடுநர் போலக் கைதொழுது ஏத்தி,
இரந்தன்று ஆகல் வேண்டும் - பொலந்தார்
மண்டமர் கடக்கும் தானைத்
திண்தேர் வளவற் கொண்ட கூற்றே."

(புறநானூறு : பாடல் : 226
பாடியவர் : மாறோக்கத்து நப்பசலையார்)

குறிப்பு : பயன்படுத்தப்பட்ட புறநானூறு பாடல்களின் எண்கள் :
34, 36, 38, 41, 70, 42, 35, 393, 397, 173, 228, 227

பொருள் விளக்கம் :

செற்றன்று ஆயினும் = மனத்தில் சினங்கொண்டாவது.
செயிர்த்தன்று ஆயினும் = வெளிப்பட நின்று போர்க்குரல் கொடுத்தாவது.
உற்றன்று ஆயினும் = உற்று நின்று கைகலந்து மெய் தீண்டியாவது.
உய்வு அன்று = பிழைக்க இயலாது.
பொலந்தார் = பொன்மாலை.
மண்டமர் = போருக்குப் பெரகி வந்த படை.
கூற்று = சாவு.

உறை விட்டெழுந்தது வாள் என்றால்,
ஒரு பகைப்புலம் ஒழிந்தது பார் என்று
உறையூரில் ஆண்ட மன்னன் - தமிழ்
உலகு புகழ் சோழ மன்னன்!

வளமுற்ற பொன்னி நிலப் பெருவேந்தன் - கண்ணில்
குளமுற்றொருவர் வந்துவிட்டால் உளமுருகி வரவேற்று
அளவற்ற பொற்குவியல் கொடையாய் வழங்கிடுவோன்
குளமுற்றம் எனும் ஊரில் இயற்கை எய்தியதால்
சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் என
வாழும் வரலாற்று இலக்கியத்தில் நிலைத்திருப்போன்!

புறநானூறுக் கருவூலத்தில் இவன் பெருமைதனைப் பாடுகின்ற
புகழ்க் கவிதை பல உண்டு! பாடிய புலவர்களும் பலராவர்!

"பசுவின் காம்பை அறுத்திடும் பாவிகட்கும்
பாவையின் கருவை மிதித்துச் சிதைத்தோர்க்கும்
பாசமிகு பெற்றோரை வதைத்தோர்க்கும் மன்னிப்பு உண்டெனினும்

பார்முழுதும் தலைகீழாய்த் திசைமாறிக் கவிழ்ந்தாலும்
பாதகராம் நன்றியினைக் கொன்றோர் வாழ்வு
பாழ்பட்டே நாசமாகு" மென்று - அவன்பால்
பரிசுபெற்ற ஆலத்தூர்கிழார் எனும் பாவாணர்,
பரிவுடனே நன்றிகூறி நல்வாழ்த்துச் சொன்னார்.

கருவூரைக் கிள்ளி மன்னன் முற்றுகையிட்டபோது,
"காவல் மரங்கள் சாய்கின்ற ஒலி கேட்டு;
அரண்மனைக்குள் ஒளிந்துகொண்டு அஞ்சி நடுங்கும்
ஆண்மையற்ற கோழையினை வெற்றிகொளல் பெருமையாமோ?" என -

கிள்ளிவளவன் முன் சென்று அந்த ஆலத்தூர்கிழார்
அள்ளிப் பொழிந்த அறிவுரைப் பாடல் கேட்டு
துள்ளி வந்த படையுடனே திரும்பிச் சென்றான் -
கொள்ளி மீது வீழ்ந்த புழு மீண்டது போல் மீண்டான் கருவூர் மன்னன்!

ஆலத்தூர் கிழாரை யடுத்து அரிய பாடலொன்று
ஆவூர் மூலங்கிழார் அவன் மீது பாடியுள்ளார்.
"ஆற்றல்மிகு அடலேறே! அரசர்க்கரசே!
அனல் பறக்கும்; நீ சினங் கொண்டால்!
அருள்கொண்டு நீ பார்த்தாலோ அவ்விடத்தே,
சுடர்ப் பொன்மணிகள் ஒளி உமிழும்!
கோடைக் கதிரவனைக் குளிராக்கிக் காட்டிடவும்,
குளிர்நிலவை தணலைப் போல் சூடாக்கித் தந்திடவும்,
கொற்றவனே உன்னால்தான் முடியும்" என்று
நற்றமிழால் போற்றியுள்ளார் அப்புலவர்!
"காலனும் காலம் பார்ப்பான், உயிர் மொண்டு செல்ல; - சோழர் குலக்

காவலனே! நீயோ; களத்தில் பகைவர் உயிரை
நினைத்தவுடன் ஒரு கணத்தில் போக்குகின்றாய்!" - என்று
வினை முடிக்கும் அவன் வீரத்தை வியந்துரைக்கும் கோவூர்க்கிழார்;
"விறகு வெட்டச் சென்றவர்க்குக் காட்டில் பொன் கிடைத்தாற்போல்
வேந்தன் கிள்ளியிடம் வந்தோர்க்கெல்லாம் பரிசுப் போருள் கிட்டும்" என்று கூறுகின்றார்.

"தாய்ப்புலி; தன் குட்டிதனைக் காப்பது போல்
தமிழ்க்குலம் காக்கின்ற வேந்தன் நீதான்!
கரும்பிடைத் தேனும், கடைமடை வாளை மீனும்,
கன்னியர் பறித்து வரும் செங்கழுநீர்ப் பூவும்,
கழனியில் உழுவோர் கண்டெடுத்த ஆமைகளும்
காவிரியின் நீர்ப் பெருக்கால்
திரும்பிய பக்கமெலாம் நெல்மணியும்
திகழ்சோழ வளநாட்டை ஆளுகின்ற கோவே!" என்று
இடைக்காடனார் எனும் புலவர்;
ஏற்றிப் புகழுகின்றார்; கிள்ளிவளவனையே!
"வெயிலுக்கு மறைக்கின்ற குடையல்ல; வேந்தே - உந்தன் குடை; அது,
வேதனைப்படாமல் குடிகளுக்கு நல்லாட்சி தருகின்ற வெண்கொற்றக் குடையாகும்.
வெள்ளப் பாழ் வறட்சியினால் பாதிக்கப்பட்டாலும்

உள்ளம் தளராமல் உழைக்கின்றார் வேளாண் குடியினர்
போர்முனையில் உன் வீரர் தீட்டுகின்ற வெற்றியெலாம்
ஏர்முனையின் துணையின்றி நடவாது என்பதாலே;
மழவர் குலம் வாழ வைக்க
உழவர் குலம் போற்றி வாழ்க!" என்று
வெள்ளைக்குடி நாகனார் எனும் புலவர்
வேந்தனுக்கு அறிவுரையும் வாழ்த்தும் சொன்னார்!

"ஆடுகின்ற மங்கையரின் இடையைப் போல்
நாடு முற்றும் வறட்சியினால் மெலிந்த போதும்
கருணை மழை பொழிந்து எமைக் காக்கும்
காவிரிசூழ் வளநாடன் கிள்ளிவளவன்" என
நல்லிறையனார் எனும் புலவர்
நயமிகு உவமையுடன் போற்றுகின்றார்!

"இயற்கையின் சிற்றத்தால் இவ்வுலகே அழிய நேரிடினும்
எதற்கு நாம் அஞ்ச வேண்டும் கிள்ளிமன்னன் இருக்கையிலே" என்று
எண்ணற்ற புகழ் முத்துக் கவியாரம் தொடுத்தார்;
எருக்காட்டூர்ப் புலவர் தாயங் கண்ணனார்! ...... அவர்
தஞ்சைக் குளிக்கரைக்கு அருகில் வாழ்ந்த
தமிழ்பூ புலவரேறு என கூறிடுவர் ஆய்வாளர்!

இவ்வாறு,
ஆவூர் மூலங்கிழார், ஆலத்தூர்கிழார்,
ஆடுதுறை மாசாத்தனார், ஐயூர் முடவனார்,
நல்லிறையனாருடன், மாறோக்கத்து நப்பசலையார்,
எருக்காட்டூரார், இடைக்காடனார்,
வெள்ளைக்குடி நாகனார், கோவூர்கிழாரெனப்
புலிகள் எல்லாம் சூழ்ந்துகொண்டு சிங்கத்தைப் புகழ
புகழ்பெற்ற அச்சிங்கம் புள்ளிமான் ஒன்றைத் தேடிச்சென்று
புறப்பாட்டால் வாழ்த்துரைத்து வணங்கிய கதை போல
சிறுகுடி யெனும் சோழ நாட்டுச் சிற்றூரில்
தருநிழல் போல ஒரு நண்பன் உண்டு கிள்ளிக்கு! அப்
பெருங்குடிக் கிழவன் பண்ணன் நிலத்தில்
அறுவடையாகும் நெல்மணி யாவும் வறியோர்க்கு
அளித்தனன் நன்கொடையாக என
அறிந்ததும் கிள்ளி அகமிக மகிழ்ந்து ஆங்கு சென்றான்.
அவனக்குப் "பசிப்பிணி மருத்துவன்" என்று பட்டமும் ஈந்தான்!

"வான் போலக் கொடை வழங்கும் பண்ணனே - நீ
யான் வாழும் நாளும் சேர்த்து வாழியவே!" என்று
புறப்பாடல் ஒன்றெழுதி அவன் கையில் கொடுத்துப்
புறப்பட்டான்; தலைநகராம் உறையூரை நோக்கி!

மாற்றார் எப்படை கொண்டுவரினும்; இவனிடம்
தோற்றார் என்றே வீரவரலாற்றைத் தீட்டிய வளவன்;
ஆவின் பாலொத்த அருள்வடியும் முகத்தழகன்,
சாவின் பிடிதனிலே ஒரு நாள் சாய்ந்து விட்டான்...
செய்தி கேட்டு செவிப்பறை கிழிந்தது போல்
செந்தமிழ்ப் புலவர் கூட்டம் சிந்தியது கண்ணீர் அருவி!

"இறந்தோரைப் புதைப்பதற்குத் தாழிதனைச் செய்வதிலே
சிறந்தோரைக் கேட்கின்றேன்; எம்மன்னன்
கிள்ளியினை வைத்துப் புதைக்கின்ற தாழி யெனில்
கீழ்த்திசை மேற்றிசை வானத்தை வளைத்து வைத்து
நிலவுலக முழுவதையும் குயவர் ஆழியாக அமைத்து
நிமிர்ந்து நிற்கும் மேருமலையை மண்திரளாய்க் கொண்டன்றோ
தாழி செய்தல் வேண்டும்!

பூத உடல் புதைப்பதெனில் பொருந்தும் உம் தாழி - கிள்ளியின்
புகழ் உடலை வைப்பதற்கு இந்தப் பூதலமே ஏற்ற தாழி" - என்று
சோகமுடன் ஐயூர் முடிவனார் இரங்கற்பா எழுதும்போதும்
சோழனது கீர்த்திக்கு எல்லையில்லை என்று கண்டார்!

"நன்றியில்லா கூற்றுவனே! எத்தனைப் பகைவர்களைப் போரில்
கொன்று தந்தான்; நீ தின்று கொழுத்தாய்!
இன்று நீ அவனையே தீர்த்து விட்டாய் -
இனி யார் உனக்கு இருக்கின்றார் தீனி போட?" என்று
ஆடுதுறை மாசாத்தனார்; அவன், களத்தில்
நீடுபுகழ் பெற்ற கதை சொல்லிக் கண்ணீர் விட்டார்!

மாறோக்கத்துக் கவியரசி நப்பசலை எனும் பெருமாட்டி
மாமன்னன் மறைவுற்ற செய்தியினை நம்பவில்லை.
குளமுற்றம் அரண்மனைக்குப் பறந்து போனார் - அங்கே
களம்பட்ட யானை போலக் காவிரிநாடன் கிடந்தான்;
காயமேதும் உடலில் இன்றி!

உளம் பதறி நப்பசலை கேட்கின்றார்;
உண்மைதானோ நான் காணும் காட்சி?
உரைத்திடுவீர்; உறையூர் மன்னர்தம்
உயிர் பறிக்கும் ஆற்றல் சாவுக்கு உண்டா சொல்வீர்!

பின் எப்படித்தான் நடந்ததிந்தச் செயல்?
என் மனதில் பட்டதை நான் இயம்புகின்றேன் - கேளீர்! என்றார்.

* பொன் ஒளி சேர் மாலை யணிந்து
மின்னொளி யாய் வாள் வீசி
மண் மீது மாற்றார் படை அழிக்கும்
திண் தேர் வளவனை யாரும் வெல்லுதல் அரிதே!
வளவன் உயிர் கொண்ட சாவு; நெஞ்சில்
வஞ்சப் பகை கொண்டோ; அன்றி நேர்நின்று தன்
வலிமை காட்டிப் போர் புரிந்தோ - அன்றி
வரிந்து கட்டி அவன் உடல் தீண்டி வளைத்துப் போட்டோ

வென்று விட்டதாய் நான் எண்ணவில்லை; அவனைக்
கொன்று செல்ல வந்த சாவு; ஓலைச் சுவடியுடன் ஒரு
புலவரைப் போல் வேடமிட்டு கை தொழுது அவன் உயிரைப்
புதிய பரிசாகக் கோட்டுப் பெற்றிருக்கும் - அல்லால்
அவன் உயிரை எடுப்பதற்கு
எவனுக்கும் உடலில் உரமே இல்லை!

இவ்விதம்,

அப்பழுக்கற்ற அன்பின் பெருக்கத்தால்
நப்பசலைப் பெருமாட்டி பாடியதும் உண்மைதானே!
செப்பரிய திறமுடைய செம்பியனாம் கிள்ளியின்
ஒப்பரிய புகழ்மணக்கும் தமிழர் நாட்டின்
பெருமை யெலாம் காப்பதற்கு முன்வராமல்
பேய்க் காற்றில் ஒடிந்து விழும் மரமாக இனப்பெருமை
ஆகலாமோ? உணர்ந்து சொல்வீர்!


கவிஞர் : கருணாநிதி(18-Mar-11, 10:50 pm)
பார்வை : 201


மேலே