செவிலி தேடிய சித்திரப் பாவை!

*" எறித்தரு கதிர்தாங்கி ஏந்திய குடை நீழல்
உறித்தாழ்ந்த கரகமும் உரைசான்ற முக்கோலும்,
நெறிப்படச் சுவல் அசைஇ, வேறு ஓரா நெஞ்சத்துக்
குறிப்பு ஏவல் செயல்மாலைக், கொளைநடை அந்தணீர்!
வெவ்விடைச் செலல் மாலை ஒழுக்கத்தீர்; இவ்விடை
என்மகள் ஒருத்தியும், பிறள் மகன் ஒருவனும்,
தம்முள்ளே புணர்ந்த தாம்அறி புணர்ச்சியர்;
அன்னார் இருவரைக் காணிரோ?" - பெரும!
"காணேம் அல்லேம்; கண்டனம், கடத்திடை
ஆணெழில் அண்ணலோடு அருஞ்சுரம் முன்னிய
மாண்இழை மடவரல் தாயிர் நீர் போறிர்;
பலவுறு நறுஞ்சாந்தம் படுப்பவர்க்கு அல்லதை,
மலையுளே பிறப்பினும், மலைக்கு அவைதாம் என்செய்யும்?

நினையுங்கால், நும்மகள் நுமக்கும் ஆங்கு அனையளே!
சிர்கெழு வெண்முத்தம் அணிபவர்க்கு அல்லதை,
நீருளே பிறப்பினும், நீர்க்கு அவைதாம் என்செய்யும்?
தேருங்கால் நும்மகள் நுமக்கும் ஆங்கு அனையளே!
ஏழ்புணர் இன்னிசை முரல்பவர்க்கு அல்லதை,
யாழுளே பிறப்பினும், யாழ்க்கு அவைதாம் என்செய்யும்?
சூழுங்கால் நும்மகள் நுமக்கும் ஆங்கு அனையளே எனவாங்கு,
இறந்த கற்பினாட்கு எவ்வம் படரன்மின்;
சிறந்தானை வழிபடீஇச் சென்றனள்;
அறந்தலை பிரியா ஆறும் மற்று அதுவே."

(கலித்தொகை : பாலைக்கலி - பாடல் : 8 பாடியவர் : பெருங்கடுங்கோ)

பொருள் விளக்கம் :

சுவல் = தோள்
கொளை = கொள்கை.
வெவ்விடை = கடும் பாலை நிலப்பகுதிகள்
முன்னிய = செல்ல வேண்டி வந்த
படுப்பவர் = பூசிக்கொள்பவர்
முரல்பவர் = பாடுபவர்
இறந்த = உயர்ந்த
எவ்வம் = வருத்தம்

" பால் நிலவு பாலையிலே காய்வது போல்
பருவக் கிளிநான் பயனற்றுப் போய்விடவோ?
வேல் தூக்கி விண்ணதிர வீசுகின்ற கண்ணாளா - சற்று
விழிதூக்கி என்நிலையை நோக்கிடுக!

கண்ணெல்லாம் குளமாக நின்கின்றேன் - ஒரு
பெண்ணென்றால் பேய்கூட இரங்குமாமே!

என்னதான் எனக்கு விடை அளிக்கின்றாய்? - அன்றனக்கு
கன்னலாகச் சுவைத்தநான் இன்று கசந்ததுதான் - ஏன்; சொல்வாய்!"

சேல் நிகர்த்த விழியிரண்டைக் கெஞ்சவிட்டு - அவன்
கால் பிடித்துக்கொண்டவாறு கதறியழுத

நூலிடைப் பெண்ணாளைத் தழுவி எடுத்து - அவன்
ஆலிலை வயிற்றினிலே தடவிக் கொடுத்து

"அடி பேதாய்; கலங்காதே - ஆருயிரே! அணிரதமே!
நொடிப்போதும் உனைப்பிரிவதற்கு முடியாதென்னால்!

இடி இடித்தாற்போல் உன் பெற்றோர் கூச்சலிட்டு
தடை விதிக்கின்றரே நம் உறவுக்கு - அதனால்தான்

தயங்குகின்றேன் தளிர்க்கொடியே! தங்கமே!
மயங்குகின்றேன் என் செய்வது என்றறியாமல்!"

காதலன் சொற்கேட்டுக் காரிகையும் - அவனைக்
கட்டிப்பிடித்து மார்பகத்தால் முட்டித்தழுவி; - " என் இதழ்தூ

தேன் கேட்டுத் தருவதற்குள் எடுத்துக்கொள்வாயே; என் அன்பே!
ஏன் கேட்டு வேண்டும் இனி என் பெற்றோரை?

ஆலையிற் கரும்பென அகப்பட்ட சிறை விடுத்து,
பாலைவெளியில் உன்னோடு பறந்திடுவேன்" என மொழிந்தாள்.

நாளைப் பயணமெனக் காளை நவின்றவுடன் - அவன்
தோளை வளைத்துத் தொத்திக்கொண்டு - புறப்பட்டாள்.

செய்தி அறிந்து செந்தீ மிதித்தார்கள் பெற்றோர்கள்!
செவிலித்தாள் கிளம்பிட்டாள் அந்தச் சித்திரத்தைத் தேடுதற்கு!

முல்லையும் குறிஞ்சியும் திரிந்த நிலம்
தொல்லைகள் குவிந்த பாலை நிலம் - அதனை

வில்லையொத்த புருவத்தினளும் - கருங்
கல்லையொத்த உருவத்தினலும்

கடந்திருக்க வேண்டுமெனக் கருதியதால்
கடுகி நடந்தாள் கவலையுடன் செவிலித்தாய்.

அங்கே,

தோளில் தாங்கும் தண்டுகளில்
தொங்குகின்ற உறிகளுடன்

தூய நெஞ்சப் பெரியோர்கள்
தொலையாப் பயணம் நடத்துகின்றார்.

இறை நினைவகலா இரவலோர் அவரை
இடை வழிமறித்து செவிலி நின்றாள்.

" அந்தணர் எனப்படும் அறநெறியாளரே! இந்தச்
செந்தழற் பாலையில் எம் செல்வத்திருமகள்;

கன்றெனத் துள்ளும் கட்டழகு இளைஞனுடன்
அன்றில் புள்ளெனச் சென்றது கண்டீரோ?

களவியல் வாழ்க்கை நடத்திக் களித்தனர் - இன்றோ
உலகியல் அனைத்தும் துய்க்கத் துணிந்தனர்.

வளமிகு நெஞ்சப் பெரியீர்! நல்லீர்!
வழியினில் அவர்களைக் கண்டீரோ சொல்வீர்!"

ஆவல் பீறிடக் கேட்ட அவளிடம் - "உமது
காவல் மீறியக் கன்னியைக் கண்டோம் அம்மா!

சேவல் நிகர்த்த செந்தமிழ் வீரனை - அந்தச்
செந்தாமரை அழகி சேர்ந்தது சிறப்பே!

சென்றவரை உளமார வாழ்த்தி அனுப்பாமல் - நீயும்
குன்று, மலை ஏறிவந்து தேடுதல் வியப்பே!

ஒன்று கேள்!

மலையிடைப் பிறந்த சந்தனமெனினும் - அது
மணத்தை அளிப்பது, பூசி மகிழ்பவர்க்கன்றோ!

மலைக்குத்தான் அது என்றுமே உரிமையெனில் - அதன்
மணத்திற்குத்தான் மதிப்பேது தாயே!

முத்து பிறப்பது கடலில் எனினும் - அதன்
புத்தொளி சிறப்பது அணிவோர் உடலில்!

ஆழ்கடலுக்கே அஃது உரிமை எனில்
அந்தக் கடலுக்கும் முத்துக்கும் பெருமைதான் என்னே?

இசை பிறப்பது யாழிலே எனினும் - அதனை
இசைத்திடும்போதே இன்பம் பொங்கிடும்!

யாழுக்கு மட்டும் இசை உரிமையெனில்
யாழுக்கு அதனால் விளையும் பயன்தான் யாது?

பெற்றோர்க்குத்தான் பெண் உரிமையெனில்
கற்றறிந்தவளே! ஒன்றறிந்திடுக!

மணந்திடாத சந்தனம் போல்
அணிந்திடாத முத்தைப் போல்

இசைத்திடாத யாழைப் போல்
இருந்திடவோ உமது பெண்ணும்?

எனவே;

கருத்தொருமித்த காதலனுடன்
கற்புடை மங்கை வாழ்ந்திடவே - நீ

இதய வாழ்த்தை ஒலித்துவிட்டு
இக்கணமே திரும்பிடுக!"

வாய்மை நிறை வழிப்போக்கர் சொற்கேட்டு
தாய்மை உளம் மிகத் தெளிந்ததாலே

கோலமகள் தேர்ந்தெடுத்த இல்வாழ்க்கை
சோலைமலராய்ச் செழித்திடுக என வாழ்த்திவிட்டு

பாலை நிலப் பயணம்செய் பெரியோர்க்கும்
பண்புடனே நன்றிகூறி வணங்கிச் சென்றாள்.

இதனைப்
பாலைக்கலியில்

பெருங்கடுங்கோ எனும் பாவலர்
பழச்சாறுத் தமிழில் தரும் பாங்கினைக் காண்க:-


கவிஞர் : கருணாநிதி(18-Mar-11, 7:27 pm)
பார்வை : 286


பிரபல கவிஞர்கள்

மேலே