இரட்டை நிழல்

பறவைகள் சிலவும் மீன்கள் சிலவும்
புலம்பு புலம்பென்று புலம்பின.
நண்டுகள் வளைகளை மேலும் மேடாக்கின.
வானத்தின் கருமையில் வஞ்சனை உண்டெனறு
அறிவர்கள் சொன்னதை நம்பாமல் அவர்களை
ஐந்து திணைக் காரர்களும் கல்லால் அடித்துக்
குன்றங்களுக்கு விரட்டி விட்டுச் சிறிய
பூசலைப் போன்ற மழையின் மின்னலைப்
பாராட்டி மகிழ்ந்திருந்தார்கள். ஆனால்
மழையோ போராய்ப் பெருகியது.
ஏரிகள் குளங்கள் ஆறுகள் குட்டைகள்
கேணிகள் என்பன மாலைக்குள் மாறி
எங்கும் தண்ணீர் ஓடாமல் விம்மியது.
கட்டழிந்த முந்நீர் ஊருக்குள் கால்வைக்க
அங்காடிகள் கோயில்கள் வாழ்மனைகள் கோட்டங்கள்
களவுப் புணர்ச்சியின் எண்ணற்ற குறியிடங்கள்
மன்றங்கள் பூங்காக்கள் எல்லாம் அழிந்தன.
திரும்பத் தனதிடம் போக விரும்பாத
கடல் நீரில் சவங்கள் கோல்கள் போல மிதந்தனய
உடுத்திய ஆடையை நீருக் கெப்படி
உருவத் தெரிந்ததோ? அம்மணப் பெண்சவங்கள்.
விரலால் மலை தூக்கிக் காப்பாற்றக்
கண்ணன் வராமல் உடல் விறைத்த ஆவினங்கள்.

ஊழிக்குப் பின் வந்த முதல் வெயிலில்
ஆடை நனைய ஏட்டுச் சுவடிகளின்
கட்டொன்றை மார்பில் அணைத்து
வெளிப்பட்டார் காப்பியர்-தொல்காப்பியர்.
தண்ணீரைத் தள்ளிக் கொண்டு.
வெள்ளம் தொடாத பகுதிக்கு வரும் அவரை
ஓடிப்போய் நானழைத்தேன்.

அழியாத எங்கள் சிற்றூர்
அருகில் உள்ளதென்றேன்.
சுவடிக் கட்டை என்னிடம் தந்தார்.

ஆடையை அவிழ்த்தார். பிழிந்தார். கட்டினார்.
என்னை முன்னே நடக்கச் சொல்லிப்
பின்னே தொடர்ந்து வந்தார்.
கூச்சலிட்டு ஊரைக் கூட்டினேன்.
சேரி திரண்டு காப்பியரைச் சூழ்ந்தது
ஆவினம் பாலிக்கும் எங்கள் குடிக்குப்
பாவினம் எதுவும் தெரியாது.
காப்பியர் தன்னைச் சில சொல்லால் அறிவித்தார்
என்றாலும்
நெற்றிப் பொட்டில் ஒரு துளியாய்ப்
பட்டு தெறித்தது படிப் படியாய் எப்படிப்
படியற்று ஊழிப் பெருமழையாய்ப்
பெருகியதென்று காப்பியர் சொன்னார்.
அவரை எனக்குப் பிடித்தது. அவருக்கும்.
மத்துக் கயிற்றின் துண்டம் போல் விரல்;
வளமான தீங்குரல் மிகையற்ற முறுவல்
சுவடிகள் போனதற்குக் கண்ணீர் சொரிந்தார்.

எங்கள் ஊரில் பனைமரங்கள் ஏராளம்.
ஓலைகள் ஆயிரம் பறித்துப் போடுவேன்
கவலை விடுங்கள் என்றேன் நான்.
காப்பியர்க்குக் குளிரும் மெய்வருத்தமும் போகக்
கள்ளைக் குடிக்கச் சொல்லி வேண்டினார் பலர்.
கள்ளை மறுத்தார். காய்ச்சிய பால்
உண்டென்று சொல்லி முன் வைத்தேன்
கொஞ்சம் பருகினார். மீதி வைத்தார்.

‘தெரிந்தார் அனைவரும் இறந்தவராகத்
தனியாளாய் நீந்தினேன். நானும்
இறப்பது திண்ணம். ஆனால் அதற்கு முன்
வாழ்வான் ஒருவனைக் கண்ணாரக் கண்டு
விடவேண்டும் என்று விரும்பினேன்
இந்த சிறுவனைக் கண்டேன்” என்றார்
காப்பியர் என்னைக் குறிப்பிட்டுக் காட்டி.
என்ன நேர்ந்தது அவருக்குத் திடீரென்று?
என் மேல் பரவிய அவரது பார்வை
அங்ஙனே இருக்க உயிர் பிரிந்தது.
காப்பியர் பற்றியே நினைத்துக் கொள்வேன்.
அவரது பேச்சு அவரது பார்வை
ஆடை பிழிந்து என்னைப் பின் தொடர்ந்து
நான் வழங்கிய பாலைப் பருகி
மகிழ்ந்த முன்னத்துடன்…
ஏட்டுச் சுவடிகளைப் புலவருக்குத் தந்தேன்.
மாடுகளை விட்டு விட்டு மன்றங்கள் தேடினேன்.
முட்டுப் படாமல் புலவர்கள் ஏதேதோ
பட்டி மன்றங்களில் பேசுவதைக் கேட்டேன்.
அவர்கள் நெற்றியில்
காப்பியர் போல் கண்கள் இரண்டில்லை.
என்றாலும்
மன்றத்தார் கேட்டார்கள். கைகொட்டிச் சிரித்தார்கள்.
புலவர்கள் சிரித்தால் அவர் சிரிப்பில்
காப்பியர் மீதி வைத்த பாலின் நினைவு வரும்
மாடுகள் விட்டேன் மன்றங்கள் விட்டேன்
பனங்காட்டில் அலைந்தேன் -
வயதில் சிறியவனாய் நெஞ்சில் முதுமகனாய்
கல்லாத இருள் மனதில் கலக்கமே கைவிளக்காய்
நாட்கள் சில செல்ல இறந்தேன் நானொரு நாள்.
பெற்றோர்
தாழியில் என்னைப் படுக்க விட்டுக்
காப்பியர் தீண்டிய பால்கலத்தை
என்னோடு சேர்த்துப் புதைத்து விட்டுப் போனார்கள்.

இரட்டை நிழலெனக்கு
இரண்டுக்கும் இடையில்
தாழை மடல் போல் இருந்தேன்
நான்.


கவிஞர் : ஞானக்கூத்தன்(9-Sep-14, 3:30 pm)
பார்வை : 0


மேலே