வசந்த காலம் அல்ல!

இ‏து
வசந்த காலம் அல்ல!
நம் வேதனைகளில்
வெப்பம் தகிக்கும் கோடை, ‏இது!

நீதி நேர்மைகளி‎ன்
நேத்திரங்களைப் பிடுங்கிப்
பலகரைகளாக்கி அதிகாரவர்க்கம்
பல்லாங்குழி ஆடுகிறது; அத‎ன்வசம்
நமது முகவரிகள்.

ஏக போகங்கள் ஏவிவிட்ட
வெறி நாள்களி‎ பற்களில்
நொறுங்குகிறோம் நானும் நீயும்.
விம்பிள்டனும், பிரெஞ்சு ஓப்பனும் பார்க்கத்
தரு‎ணம் அல்ல ‏ இது!

இரத்தப்
புற்று நோய் கண்ட
‏இந்திய ஜனநாயகத்தின்
கழிப்பிடங்களே கட்சிகள்!

ஆரோக்கியமற்ற அரசியல்
நமது
மார்புக் கூட்டுக்குள் வந்து
‏இருமுகிறது.
அயல்நாட்டுக் கட‎ன்கள்
அதட்டுகி‎ன்றன நம் சுவாசப் பைக்குள்!

நாதசுரமும், தில்ரூபாவும்
நாளை வரை ஒத்திவைப்போம்!
கபாலத்துள் நுழைந்து
நமது
மூளைகளில்
கஞ்சாப் பயிரிடும் கலைகள்..

‏இரசிக மன்றங்களுக்குத்
தோரணம் கட்டப் போன வாலிபத்தைத்
தோல் கிழியச்
சாட்டையால் அடித்துத் திருத்துவோம்!

கையைத் தட்ட அல்ல
கழிசடைகள் பல்லைத் தட்ட
ராக்கம்மாக்களைக் கூப்பிடுவோம்!

காம அசைவுகளில்
ஆபாச நெளிவுகளில்
பணம் பொறுக்கும் நிர்வாணங்கள் மேல்
நெருப்புத் தறி போடுவோம்!

திமிரில் மிக்கவன்‎
துரியோதனனா? ‏ ‏ இராவணனா?
பட்டிமண்டபச்
சிரிப்பு விபசாரத்தில் - நாம்
விரயமாகத் தருணம் ‏ இது அல்ல!

கஞ்சிக்கே
வழியில்லா நாட்டில்,
‘கனகாபிஷேகங்களி‎ன்'
கருணை வெள்ளம் வந்து நம்
துக்கங்களை
அடித்துக் கொ‎ண்டு போகாது!

ஆ‎ன்மீகத்தின் நரம்புகளில்
மூடத் துடிப்புகள்..
ஞான பூமிக்குக் கள்ளர்களே
குத்தகைதாரர்கள்!

மரணித்த
பெரியார் கொள்கைகளுக்குத்
துக்கம் அனுசரிக்கவே
கறுப்புச் சட்டைகள்!

‏‏இது
விஷத் தொலைக்காட்சி
விரிக்கும் ஆக்டோபஸ் விரல்களுக்கு
முத்தம் கொடுக்கும் நேரம் அல்ல!

‏இனி
முள்களோடு பழகுவோம்!
ஏனெனில
இது வசந்தகாலம் அல்ல !


கவிஞர் : ஈரோடு தமிழன்பன்(9-Mar-12, 12:13 pm)
பார்வை : 30


மேலே