ஒரு வலியா இரு வலியா

நடந்து அழுதமின்னா
நடந்த
எடம்
ஆறாகும்!

நின்னு அழுதமின்னா
நின்ன
எடம்
குளமாகும்!

புரண்டு அழுதமின்னா
புரண்ட
எடம்
கடலாகும்!

ஒரு வலியா
இரு
வலியா
ஒப்பாரி
வச்சி
அழ!

இது வழியா
அது
வழியா
எங்கேன்னு
போயி
விழ!

பூன வழி மறிச்சி
போகாதே
என்று சொல்ல

நாயி வழி மறிச்சி
நானும்
வர்றேன்
என்று சொல்ல

வளத்த
பூச்செடிய
வாகாக
வருடிவிட்டு

படிச்ச
படித்துறைய
பாத்து
அழுதுபுட்டு

வாறேன்னு
சொன்னதுமே
வாகை
மரமங்கே
வாடி
அழுததய்யா!

போறேன்னு
சொன்னதுமே
பூவரசு
மரமங்கே
புலம்பி
அழுததய்யா!

தூங்க மகனுக்கு
அங்க
தூளி
கட்ட
முடியலய்யா!

வெளஞ்ச
மகளுக்கு
அங்க
வேலி
கட்ட
முடியலய்யா!

நாய் குரைக்கும்
சத்தத்துக்கு
நாங்க
நடுங்காத
நாளுமில்ல!

போய்ப் பதுங்கும்
பொந்துக்குள்ள
அய்யோ
புடுங்காத
தேளுமில்ல!


பட்ட கத சொன்னமின்னா
ஒங்க
மனம்
பத்தி
எரியுமய்யா!

அவுக . . .
சுட்ட கத சொன்னமின்னா
ஒங்க
மனம்
துடிச்சி
எரியுமய்யா!


எங்கமன வேதனைய
எழுத்தாக்க
நெனச்சமுன்னா
அய்யோ அந்த
எழுத்தாணி
உருகுமய்யா!

பாவி மன
வேதனைய
படமாக்க
நெனச்சமுன்னா
அய்யோ அந்த
படச்சுருளும்
கருகுமய்யா!

ஒரு வலியா
இரு
வலியா
ஒப்பாரி
வச்சி
அழ!

இது வழியா
அது
வழியா
எங்கேன்னு
போயி
விழ!


கவிஞர் : அறிவுமதி(9-Mar-12, 3:51 pm)
பார்வை : 20


மேலே