ஸ்ரீ தேவி சதுதி

நித்தமுனை வேண்டி மனம் நினைப்ப தெல்லாம் நீயாய்ப்
பித்தனைப்போல் வாழ்வதிலே பெருமையுண்டோ? திருவே!
சித்தவுறுதி கொண்டிருந்தார்
செய்கை யெல்லாம் வெற்றிகொண்டே
உத்தமநிலை சேர்வ ரென்றே
உயர்ந்த வேதமுரைப்ப தெல்லாம்
சுத்த வெறும் பொய்யோடீ? சுடர்மணியே! திருவே,
மெத்தமயல் கொண்டு விட்டேன் மேவிடுவாய், திருவே! 1

உன்னையன்றி இன்ப முண்டோ உலகமிசை வேறே?
பொன்னை வடிவென் றுடையாய்! புத்தமுதே, திருவே!
மின்னொளி தருநன் மணிகள்
மேடை யுயர்ந்த மாளிகைகள்
வன்ன முடைய தாமரைப்பூ
மணிக்குள முள்ள சோலைகளும்
அன்னம் நறுநெய் பாலும் அதிசயமாத் தருவாய்!
நின்னருளை வாழ்த்தி என்றும் நிலைத்திருப்பேன், திருவே! 2

[பாட பேதம்]: ‘வெற்றி கண்டே’
‘சுத்த முழுப் பொய்யோகாண்’
‘வாழ்த்திநன்றா நிலமளிப்பேன், திருவே.’

-- கவிமணி

ஆடுகளும் மாடுகளும் அழகுடைய பரியும்
வீடுகளும் நெடுநிலமும் விரைவினிலே தருவாய்.
ஈடு நினக் கோர் தெய்வ முண்டோ?
எனக்குனை யன்றிச் சரணமுண்டோ?
வாடு நிலத்தைக் கண்டிரங்கா
மழையினைப் போல் உள்ள முண்டோ?
நாடு மணிச் செல்வ மெல்லாம் நன்கருள்வாய், திருவே!
பீடுடைய வான் பொருளே பெருங்களியே, திருவே!


கவிஞர் : சுப்பிரமணிய பாரதி(18-Oct-12, 4:06 pm)
பார்வை : 0


பிரபல கவிஞர்கள்

மேலே