சாய்ந்த தராசு

வாழ்வதிலும் நலம் சூழ்வதிலும் புவி
மக்களெல்லாம் ஒப்புடையார்!

ஏழ்மையில் மக்களைத் தள்ளுவதோ? - இதை
இன்பமெனச் சிலர் கொள்ளுவதோ?

கூழுக்குப் பற்பலர் வாடவும் சிற்சிலர்
கொள்ளையடிப்பதும் நீதியோ - புவி
வாழ்வதுதான் எந்தத் தேதியோ?

சிற்சிலர் வாழ்ந்திடப் பற்பலர் உழைத்துத்
தீர்கஎனும் இந்த லோகமே - உரு
அற்றொழிந் தாலும்நன் றாகுமே!

காண்பதெலாம் தொழிலாளி செய்தான் அவன்
காணத்தகுந்தது வறுமையாம் - அவன்
பூணத் தகுந்ததும் பொறுமையாம்!

அன்பெனச் சொல்லியிங் காதிமுதற் பேத
வன்மை வளர்த்தனர் பாரிலே - அதன்
பின்புகண் டோம்இதை நேரிலே

மக்கள் பசிக்க மடத்தலைவர்க் கெனில்
வாழை யிலைமுற்றும் நறுநெய்யாயம் - இது
மிக்குயிர் மேல்வைத்த கருணையாம்

கோயிலிலே பொருள் கூட்டும் குருக்களும்
கோதையர் தோளினிற் சாய்கின்றார் - இங்கு
நோயினிலே மக்கள் மாய்கின்றார்

கோரும் துரைத்தனத்தாரும் பெரும் பொருள்
கொண்டவர்க்கே நலம் கூட்டுவார் - உழைப்
போரிடமே கத்திதீட்டுவார்

மக்களெல்லாம் சமமாக அடைந்திட
மாநிலம் தந்ததில் வஞ்சமோ? - பசி
மிக்கவரின் தொகை கொஞ்சமோ?


கவிஞர் : பாரதிதாசன்(4-Jan-12, 3:17 pm)
பார்வை : 24


பிரபல கவிஞர்கள்

மேலே