தமிழியக்கம் - சொற்பொழிவாளர்!
மற்போர்க்கே அஞ்சிடுவோம்
ஆயினும்யாம் வண்மைமிகு
தமிழர் நாட்டில்
சொற்போருக் கஞ்சுகிறோம்
என்றாராம் ஒரு முதியார்
அவர்க்குச் சொல்வேன்
கற்போரின் பகுத்தறிவைக்
கவிழ்க்கின்ற ஒழுக்கமிலாக்
கதையைத் தாங்கி
நிற்பாரும் நிற்பாரோ
நின்றாலும் வீழாரோ
நெடுங்கா லின்றி?
சமயமெனும் சூளையிலே
தமிழ்நட்டால் முளையாதென்
றறிந்தி ருந்தும்
சமயநூல் அல்லாது
வழியறியாத் தமிழ்ப்புலவர்
சமயம் பேசித்
தமிழ் அழிப்பார் எனினும் அவர்
தமிழ் வளர்ப்போம் என்றுரைத்துத்
தமை வியப்பார்
தமிழ் வளர்ச்சி தடைப்பட்டால்
தம்வளர்ச்சி உண்டென்றும்
நினைப்பார் சில்லோர்!
பணமனுப்பி வாரீர் எனில்
பயணமுறும் தமிழ்ப்புலவர்
ஊரில் வந்து
மொண மொணெனக் கடவுளரின்
முச்செயலின் பொய்ப்பேச்சில்
முழுக வைப்பார்
கணகணெனத் தமிழ்க்கல்வி
கட்டாயம் செயத்தக்க
கருத்தும் சொல்லார்
தணியாத சமயமொடு
சாதியெனும் தீயில் நெய்யைச்
சாய்த்துச் செல்வார்
மொழியழிப்பான் தனைப்பற்றி
ஒரு மொழியும் மொழிவதில்லை
மொழிந்தால் பார்ப்பான்
விழிநோகும் என நடுங்கி
வெண்ணீற்றுப் பதிகத்தை
விரித்துச் சொல்லிப்
பழியாகத் தன் தாயைப்
புணர்ந்தானைச் சிவன் உவந்த
பாங்கும் கூறி
ஒழிவார்கள். தமிழ்மொழியை
ஒழிப்பாரை ஒழிப்பதன் முன்
ஒழியா தின்னல்!
உலகுக்குத் தமிழ்மொழியின்
உயர்வுதனைக் காட்டுவது
சொற் பெருக்காம்!
கலகத்தை சமயத்தைக்
கழறுவதைக் காதாலும்
கேட்க வேண்டாம்
சிலகற்றார் பலகற்க
விரும்பும்வகை செயல் வேண்டும்!
கல்லார் ஓடித்
தலையுடைத்துக் கொளவேண்டும்!
தன்னலம் இல்லார் சொல்லால்
எல்லாம் எய்தும்!