அலைகள்

அலைகளே! நீர்மேல் ஆடுந் தண்ணீர்
மலைகளே! கடலின் மந்திரக் கைகளே!

வித்தை புரிந்து வீசுங் காற்று
நித்தந் திரிக்கும் நீர்க்கயி றுகளே!

காற்றெனுங் கயவன் கடலாம் கன்னியின்
மேற்புறம் உரியும் மெல்லிய துகில்களே!

கரையில் தற்கொலைக் காரியம் நடத்தல்
முறையா? சரியா? முடிவுரை என்ன?

கண்வழி புகுந்து கனவென மலர்ந்து
வெண்துகில் போர்த்து மேலே எழுந்து

விம்தித் தாழ்ந்த வெண்மார் புகளே!
தம்பலம் காட்டும் தண்ணீர் வெடிகளே!

கடல்நீர் விழாவில் கரக ஆட்டம்
நடத்தித் தோற்கும் நாடகக் கும்பலே!

கருப்புக் கடலுக் காசநோ யாலே
இருமித் துப்பும் எச்சில் மலைகளே!
கறுப்புக் கடற்றயிர் கடையப் படுகையில்
தெறித்த வெண்ணெய்த் திரைகளே! நீங்கள்

கரையில் கலையும் கடலின் கனவுகள்
கரைக்கன் னத்தில் கடல்முத் தங்கள்
நகர்ந்து விரைந்து நடந்து கரையில்
தகர்ந்து போகும் தண்ணீர்ச் சுவர்கள்


கவிஞர் : வைரமுத்து(19-Mar-11, 6:30 pm)
பார்வை : 593


பிரபல கவிஞர்கள்

மேலே