லக்ஷ்மி பிரார்த்தனை

மலரின் மேவு திருவே; -- உன்மேல்
மையல் பொங்கி நின்றேன்;
நிலவு செய்யும் முகமும் -- காண்பார்
நினைவ ழிக்கும் விழியும்
கலக லென்ற மொழியும் -- தெய்வக்
களிது லங்கு நகையும்
இலகு செல்வ வடிவும் -- கண்டுன்
இன்பம் வேண்டு கின்றேன். 1


கமல மேவும் திருவே! -- நின்மேல்
காதலாகி நின்றேன்;
குமரி நின்னை இங்கே -- பெற்றோர்
கோடி யின்ப முற்றார்;
அமரர் போல வாழ்வேன், -- என்மேல்
அன்பு கொள்வை யாயின்;
இமய வெற்பின் மோத, -- நின்மேல்
இசைகள்பாடி வாழ்வேன்;
2

[பாட பேதம்]: தொடையினிலும்

வாணி தன்னை என்றும் -- நினது
வரிசை பாட வைப்பேன்;
நாணி யேக லாமோ? -- என்னை
நன்க றிந்தி லாயோ?
பேணி வைய மெல்லாம் -- நன்மை
பெருக வைக்கும் விரதம்
பூணு மைந்த ரெல்லாம் -- கண்ணன்
பொறிக ளாவரன்றோ?
3

பொன்னும் நல்ல மணியும் -- சுடர்செய்
பூண்க ளேந்தி வந்தாய்!
மின்னு நின்றன் வடிவிற் -- பணிகள்
மேவி நிற்கும் அழகை
என்னுரைப்ப னேடீ! -- திருவே!
என்னு யிர்க்கொ ரமுதே!
நின்னை மார்பு சேரத் -- தழுவி
நிகரிலாது வாழ்வேன்; 4

செல்வ மெட்டு மெய்தி -- நின்னாற்
செம்மை யேறி வாழ்வேன்;
இல்லை என்ற கொடுமை -- உலகில்
இல்லை யாக வைப்பேன்
முல்லை போன்ற முறுவல் -- காட்டி,
மோக வாதை நீக்கி,
எல்லை யற்ற சுவையே! -- எனைநீ
என்றும் வாழ வைப்பாய்


கவிஞர் : சுப்பிரமணிய பாரதி(18-Oct-12, 4:04 pm)
பார்வை : 0


பிரபல கவிஞர்கள்

மேலே