மயங்கா மார்புடை மறவன் நீயே!

"தென்பரதவர் மிடல் சாய
வடகடுகர் வாள் ஒட்டிய
... .. ... ... ... ... ... ...
... .. .. ... ... ... .. ..
... ... .. .. ... ... .. ..
மேம்படு சிறப்பின் அருங்கல வெறுக்கை
தாங்காது பொழிதந் தோனே; அதுகண்டு
இலம்பதாடு உழந்தஎன் இரும்பேர் ஒக்கல்,
விரல்செறி மரபின செவித்தொடக் குநரும்,
அரைக்கமை மரபின மிடற்றியாக் குநரும்,
மிடற்றமை மரபின அரைக்குயாக் குநரும்,
கடுந்தெறல் இராமன் உடன்புணர் சிதையை
வலித்தொகை "அரக்கன்" வெளவிய ஞான்றை
நிலஞ்சேர் மதர்அணி கண்ட குரங்கின்
செம்முகப் பெருங்கிளை இழைப்பொலிந்தாஅங்கு
அறாஅ அருநகை இனிதுபெற் றிகுமே
இருங்கிளைத் தலைமை எய்தி
அரும்படர் எவ்வம் உழந்ததன் தலையே"

(புறநானூறு:பாடல்:378)

"வழிபடுவோரை வல்றி தீயே!
பிறர்பழி கூறுவோர் மொழிதே றலையே;
நீமெய் கண்ட தீமை காணின்
ஒப்பநாடி அத்தக ஒறுத்தி
வந்து, அடிபொருந்தி, முந்தைநிற்பின்,
தண்டமும் தணிதி, பண்டையிற் பெரிதே;
அமிழ்துஅட்டு ஆனாக் கமழ்குய் அடிசில்
வருநர்க்கு வரையா வசையில் வாழ்க்கை
மகளிர் மலைத்தல் அல்லது, மள்ளர்
மலைத்தல் போகிய, சிலைத்தார் மார்ப!"
... ... .. ... ... ... ... ...
... ... .. ... ... ... ... ...
... ... .. ... ... ... ... ...
(புறநானூறு:பாடல்10)

குறிப்பு: இரண்டு பாடல்களும் "ஊன்பொழிப்
பசுங்குடையார்" எனும் புலவரால் பாடப் பெற்றவையாகும்.

பொருள் விளக்கம்:
(பாடல் 378)
மிடல்=வலிமை. இலம்பாடு=வறுமை, இரும்பேர்=உறவினர்.
செறிமரபின=அணியத்தகுந்தவற்றை.
தொடக்குநர்=அணிந்தனர்.
அரைக்கமை=இடைத்தகு உரியவற்றை. மிடற்று=கழுத்தில்.
மதர்அணி=அழகியநகை. இழை=அணி. அறாஅ அருநகை=நீங்காத அரிய மகிழ்ச்சி.

(பாடல்10)
வல்அறிதி=விரைவில் அறிவாய்.
ஒப்பநாடி=அறநெறிக்கேற்ப ஆய்ந்து
அத்தக ஒறுத்தி=அதற்கேற்ற தண்டனை தந்து.
மலைத்தல்=மயங்கி மாறுபடல். மள்ளர்=வீரர்.

தென்புலத்துக் கடலோரம் தீமை விளைவித்தோரை;
வென்றடக்கிய வீரவாளுக்குடையோன்

வடபுலத்து வடுகமன்னர் படையொடுக்கி
வாகை மாலைதனைத் தோளில் சுமந்தோன்

இளஞ்சேட் சென்னியெனும் பெயருக்குரியோன்
வளமிகு சோழமன்னன் திறன்மிகு வலிமையினை

ஊன்பொதிப் பசுங்குடையார் எனும் ஒரு புலவர்
மீன்துள்ளும் அருவிநடைத் தமிழால் தந்தார்!

நெய்தலங்கானல் சோழன் எனும் பிறந்த ஊர்ப் பெருமையுடன்
நெடிய புகழ் செருப்பாழியும் பாமூளூரும் வென்ற சோழன் எனும் அடைமொழியும்,

இரு கருத்துக்கு இடமேயின்றி, இற்றைப்புலவர்கள்
இளஞ்சேட் சென்னியினையே குறிக்குமென்பர்!

புறப்பாடல் தமிழ்ப்புலவர் இயற்றும்போதே
புராணக் காதைகளும் புழக்கத்தில் உண்டு போலும்!

அதனாலே அற்புதமாய் உவமையொன்றை
அரும்புலவர் பசுங்குடையார் அன்றைக்கே எழுதியுள்ளார்.

அரசிருக்கை கொண்டிருந்தபோது சோழனிடம்
பரிசில் வேண்டிப் பாவலர் "பாட்டாடை" போர்த்த;

"பாட்டாடை"க்குப் பதிலாக "பட்டாடை" போர்த்திப்
பார்வேந்தன் பல்வகை அணிமணி பரிசாய்த் தந்தான்!

மன்னர் குலத்தோர் மட்டுமே அணிகின்ற முத்துவடம்
மரகத மணிமாலை மாணிக்க வளையற் குவியல்,

இன்னபிற நகைகளையும் இளஞ்சேட் சென்னி
புன்னகை மிளிரப் பொழிந்தான் புலவரிடம்!

உள்ளமெல்லாம் உவகையால் நிறைந்து பொங்க
கள்ளமில்லாத தன்சுற்றத்தார்க்கு வாரிவழங்க

கடுவேகப் பயணம்செய்து உற்றார் கைவழியக்
களிப்புடனே அளித்திட்டார் கவிஞர்பிரான்!

காணாக அணிமணிகள் கண்டதாலே; சுற்றத்தார்
கண்டபடி அவற்றை எடுத்துக் கழுத்துக்குரியவற்றைக்

கைகளிலும்; கைகளுக்குரியவற்றை அவசரமாய்க்
கழுத்தினிலும் மாற்றிமாற்றி மாட்டிக்கொண்டு;

கணையாழி விரலுக்குரியதெனப் புரியாமல்
காதணியிதுவென்று பூட்டிக்கொண்டார்!

அதுகண்டு;

ஊன்பொதிப் பசுங்குடையார் உரக்கச் சிரித்தார் - அந்த
உறவினரின் செயலுக்கு உவமையொன்றும் கண்டார் அங்கே!

இராமனது மனைவியாம் சிதைதனை இராவணனாம்
இலங்கை வேந்தன் சிறையெடுத்துச் சென்றபோது;

வழியெல்லாம் அவள் கழற்றி எறிந்திட்ட அணிமணியை
வானரங்கள் எடுத்து வந்து அணியும் வகை அறியாமல்

இடைக்கென உரியதை மந்திகள் தம் கழுத்துக்கும்
எழில் கழுத்துக்குரியதைக் காலுக்கும் தொடைக்குமடாக

அணிந்தலைந்து திரிந்ததாகக் கற்பனை உண்டன்றோ?
அக்காட்சியினை உவமையாக்கிப் புலவர்ஏறு; அவர்தம்

உற்றார் உறவினரின் செயல்பாட்டைத் தமிழ்
கற்றார் களிக்கும் வண்ணம் தீட்டியுள்ளார்.

வளமிகு சொற்செல்வராம் அப்புலவர்;
இளஞ்சேட் சென்னியினை இன்னொரு பாட்டில்

புகழ்ந்திடும் விதமோ பொழில் மலர் அமுதமாம்;
போற்றிடும் பாங்கோ பொதிகைமலைத் தென்றலாம்!

அது; இதோ!
"வழிபடுவோர்க் கெல்லாம் விழிகாக்கும் இமையானாய்!
பழிகூறிப் பிறரை வீழ்த்த உன்பால் வருவோரை

இழிதகையோர் எனஎண்ணி உடன் ஒதுக்கி
இடமில்லை இங்கென்று விரட்டுகின்ற விவேகியானாய்!

குற்றம் கண்ட இடத்து அதனைச் செய்தோர் யாராயினும்
கொற்றம் சாயாது காத்திடக் கடுந்தண்டனை கொடுத்திடுவாய்!

நீதியும் நெறியும் சாயா நேர்மையே உன்னாட்சியான
வீதியில் முரசம் விதிமுறைப்படி ஒலிக்குமே!

பிழையினை உணர்ந்தோர் திருந்திப்பணிந்திடின் - அன்பு
இழையிலே கோத்த அருளினை வழங்குவாய்!

வரும் விருந்தினர் போற்றி - அவர்தம்
வாழ்த்தினைப் பெற்றிடும் பொற்புடை அரசியின்

மாங்கனி மேனி, பட்டால் மட்டுமே மயங்குமேயன்றி;
மாற்றார் கணைகள் ஆயிரம் வரினும் மயங்கா மார்புடை மறவன் நீயே!"

இவ்வாறு
ஊன்பொதிப் பசுங்குடையார் கவிப்பெருக்கில்
உவமையோ உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும்!

உறுபகைக்கு அஞ்சாத சோழ வேந்தனது
உரமான மார்பு குறித்த மாண்போ; நம் நெஞ்சை அள்ளும்!


கவிஞர் : கருணாநிதி(18-Mar-11, 10:57 pm)
பார்வை : 159


மேலே