இன்றைக்கும் கடைசி ரயில் பிடித்து

இன்றைக்கும் கடைசி ரயில் பிடித்து
அகாலத்தில் அறையடைந்திருக்கிறேன்.
அறைக்குள் அடிவைத்ததுமே தெரிந்துவிட்டது,
சந்தேகமில்லாமல் உறுதிப்படுத்தியது விளக்கு வெளிச்சம்.
சிறு மாற்றமுமில்லை – எப்படி விட்டுச்சென்றேனோ அப்படியே
சற்றும் பிசகாமல் இருந்தன எல்லாம்.
தரைத்தூசுப் படலத்தில் தடம் பதிக்காமல்
நீ நுழைந்து சென்றிருக்கிறாய்.
உன் கூந்தலிலிருந்து உதிர்ந்த பூக்கள் இல்லை
உன் மணம் இல்லை – உடனே படும்படி
உன் கடிதமெதுவும் காணவில்லை ஆயினும்
உன் வருகையை நான் உணர்கிறேன்
எனக்கான செய்தியை அனைத்து
உடுப்புகளின் பைகளிலும் தேடுகிறேன்
அயர்ச்சியினூடாக உன் வேடிக்கையை ரசித்து
புத்தகங்களுக்கும் பெட்டியிலும் துழாவுகிறேன்
தலையணை உறைக்குள், பாயின் அடியில்,
போர்வை மடிப்பில், ஏமாற்றம்.
குப்பைக் கூடையைக் கொட்டிக் கவிழ்த்து
கசங்கிக் கிடந்த தாள்களைப் பிரிக்கிறேன்

ஒரு எழுத்தும் உன்னுடையதாயில்லை – ரகசிய
பென்சில் கிறுக்கல்கள் ஏதுமற்றிருக்கிறது
புதிதாய் வெள்ளையடிக்கப்பட்ட சுவர்.
உன் விளையாட்டை விளங்கிக்கொள்ள வேண்டி
பல தடவைகள் சோதித்தாகிவிட்டது
சொற்ப பொருள்களையும்.
புதிர் அவிழ்க்கும் பிரயத்தனம் சோர்ந்தது பயனற்று.
கடைசியாக கண்ணாடியின் பின்புறம் பார்த்து
விளக்கணைத்துச் சாய்கிறேன்
ஒருக்கால் நீ வந்திருக்கவில்லையோ?
பிரமைதானோ?
இந்த அறையின் இருட்டு நிசப்தம்
இன்றவள் வந்தாள் என்றொலிக்கிறதே
நீ வந்திருந்தால் வழக்கம்போல
அறை கொஞ்சம் ஒழுங்குபட்டிருக்கும்.
புரளும்போது கைபட்டுத் தண்ணீர் சாடி விழுகிறது.
பாயில் பரவுகிறது நீரின் குளிர்மை.
காலையில் நான் புறப்படுகையில்
காலியாகத்தானிருந்தது சாடி.
நனைகிறேன்.


கவிஞர் : யூமா. வாசுகி(2-Nov-11, 4:31 pm)
பார்வை : 76


மேலே