அன்புள்ள தமிழ்ரோஜா

அன்புள்ள தமிழ்ரோஜா.

இதுவரை உனக்கு நான் எந்தக்
கடிதமும் எழுதியதில்லை.
கடிதம் என்பது தூரங்களின்
காகித வடிவம்.

உனக்கும் எனக்கும்
தூரமில்லை.
உன் காதுகள் என்
உதடுதொடும்
தூரத்திலேயே இருந்ததால்
காகிதத்தில் பேசும் அந்நியம்
நேர்ந்ததில்லை.

இன்னொன்று.
காதல் கடிதங்கள் உணர்ச்சியின்
மத்தாப்புகளாய் இருப்பதுண்டே
தவிர உண்மையின் தீபங்களாய்
இருப்பதில்லை.

ஒரு காதல் கடிதம்
படிக்கப்படும்போதே
எண்பது சதவிகிதம் கழிக்கப்பட
வேண்டும். மிச்சமிருக்கும்
இருபது சதவிகிதத்தில்
உணர்ச்சியின் வண்டலின்கீழே
உண்மையும் கொஞ்சம்
உறைந்திருக்கும்.

உலகத்தின் காதல்
கடிதங்களெல்லாம்
அழகானவை. ஆனால்
ஆரவாரமானவை.

நிலாவில் ரத்தம் கசிவதுபோல்
மீசையோடு பிறந்த
குழந்தைபோல்-
கவனம் ஈர்ப்பவை.
ஆனால் எதார்த்தம் மீறியவை.

எனவே இடைவெளி
இருந்திருந்தாலும் உனக்கு நான்
எழுதியிருக்கமாட்டேன்.
பள்ளம் நிரப்ப
நுரைகொட்டியிருக்கமாட்டேன்.

ஆனால், இப்போது
எழுதுகிறேன்.
ஏனென்றால், இது காதல்
கடிதமல்ல.
என் தன்னிலைவிளக்கம்.

உன்னைக் காதலிக்கத்
தொடங்கியபிறகு
ஒருநாளில் எத்தனை
மணிநேரம் நான்
முட்டாளாயிருக்கிறேன்
என்பதன் மொத்தத்
தொகுப்பு.

நான் உன்னை
நேசிக்கவில்லையோ என்று உன்
உணர்வுகள் உறங்கும்போது நீ
உச்சரித்தாய்.

என் காதலின் எடை என்ன
என்பதை
மில்லிகிராம் சுத்தமாய்ச்
சொல்லிவிட முடியாது.

கத்தியால் கைகீறி ரத்தம்
காட்டவும் மாட்டேன்.
நேசம்காட்ட அனுமன்போல்
நெஞ்சுகிழிக்கவும் மாட்டேன்.

பின் -
அடையாளம் எதுவென்பாய்.
என் வானத்தில் சூரியன்
அஸதமிக்கவில்லையே.
அதுதான் அடையாளம்.

எந்தப் புதுப்பேனா
வாங்கினாலும்
என்பெயர் எழுதிப்பார்ப்பதை
மறந்துஅனிச்சைச் செயலாய்
உன்பெயர்
எழுதிப்பார்க்கிறேனே.
அதுதான் அடையாளம்.

கவிதைகள் அடையாளம்.
என் கண்ணீர் அடையாளம்.
ஒருநாள் என் அறையில் நீ
தவறவிட்ட
உன் பூப்போட்ட கைக்குட்டை
என் பூஜைப்பொருள்.

என் வீட்டுக்கண்ணாடியில்
உன்படத்தை ஓரத்தில் ஒட்டி,
உன் படத்தின் பக்கத்தில்
என் பிம்பம் படியவைத்து
ஜோடிப்பொருத்தம்கண்டு
சுகம்காண்பதில் என்
சிநேகமான காலைப்பொழுது
செலவாகிறதென்று தெரியுமா
உனக்கு?

நினைவுக் கொசுக்களால்
நித்திரைதொலைந்த
ஒரு நீலராத்திரியில்
கால்கடுக்க நடந்து,
கடற்கரை அடைந்து, நீயும்
நானும் சந்தித்த இடத்தில்
அனாதைக் குழந்தைகளாய்
அழுதுகொண்டிருந்த உன்மல்லிகைஉதிர்வுகளை
மடியோடு அள்ளிவந்து
மார்போடு
தழுவிக்கொண்டு விடியவிடிய
விழித்துக்கிடந்தேனே.
அந்த நேச உஷணத்தின்
நிறமறிவாயா நீ?

என் பத்திரிகை அலுவலகத்தின்
எக்ஸரே கண்ணாளர்கள்
உன்னையும் என்னையும்
ஊடறுத்துப் பார்த்து,
தமிழ்நாட்டிலேயே
தமிழ்ப்பற்று அதிகமுள்ளவன்
கலைவண்ணன் மட்டும்தான் என்று
கிண்டல்மொழி சுண்டுவதைக்
கண்டதுண்டா நீ?

பூமியின் அடிவயிற்றில்
கனன்றுகொண்டிருக்கும்
அக்கினிமாதிரி என் அடிமனத்தில்
கனன்றுகொண்டிருக்கும்
ஆசைஅக்கினி
உன்னைச் சுடவில்லையா?

என் நேசம் புரியும் முன்பு நீ
என் நெஞ்சுபுரிய வேண்டும்.
உன்னை உன் வாழ்க்கைக்குத்
தயாரிக்கிறேன்.

தண்ணீர்பயம் கொண்டு
தள்ளிநின்றால்
நாளை எப்படி வெந்நீராற்றில்
விசைப்படகு விடுவாய்?

நீ சுத்தத் தங்கம்தான்.
நல்ல தங்கத்தில் நகைசெய்ய
முடியாது.
சிறிதே கலக்கவேண்டும்
செம்பு.

தைரியம் செம்பு. அனுபவம்
செம்பு.
அதைத்தான் உன்னில் கலக்க
நினைக்கிறேன்.

உன் கங்காரு மடியைவிட்டு
வெளியே வா.
நான் சிங்கத்தின் முதுகு...
ஏறிக்கொள்.
முதலில் - தார்ச்சூடு
காணட்டும் உன்
தாமரைப்பாதம்.

உன் வெல்வெட் திரைவிட்டு
வெளியே வா.
குளிரில் கோணிபோர்த்துக்
கூவம்கரைக் குடிசை ஒன்றில்
இரவுகழி.

உன் சைவக்கோடு கட.
கூறுகட்டி மீன்விற்கும் குப்பத்துக்
கிழவியைச்
சற்றே நகரச் சொல்லிவிட்டு
ஒரு வெயில்பகலில் மீன்
விற்றுப்பார்.

அரசாங்க லாரியில்
தண்ணீர்பிடி.
இரண்டுகுடம் வேர்வைக்குப்
பிறகு
ஒருகுடம் தண்ணீர் நிறைவதை
உணர்.

வெள்ளிக்கரண்டியோடு
பிறந்தவளுக்கு ஏன்
வேலையற்றவேலைஎன்பாய்.

ஓர் ஆணியைச் சுயமாய்
அடிக்கத்
தெரியாதவளுக்கு
வெள்ளிக்கரண்டி
சொந்தமாய் இருக்கக்கூடாது.
அனுபவங்கள் தடுப்பூசிகள்.
போட்டுக்கொள்.

அம்மைகுத்த வந்தால்
கைமறைக்கும்
குழந்தைபோல்
அடம்பிடிக்காதே.

அனுபவங்களுக்கு உடம்பு, மனம்
இரண்டையும் உட்படுத்து.
தன்னைத் திருப்பிப் போடுவதன்
முலம்தான் பூமி சூரியனிடம்
அனுபவம் பெறுகிறது.

வசந்தம்-கோடை-மழை-குளிர்-
வெயில்-புயல் என்ற
அனுபவங்கள்
இல்லையேல் எப்போதோ பூமி
இறந்துபோயிருக்கும்.

கல்யாணச் சந்தையில் உன்னைத்
துலக்கிவைப்பதற்கு மட்டுமல்ல
கல்வி.
அனுபவங்களின்பால்
ஆற்றுப்படுத்துவது கல்வி.

நமக்குள் ஆண்-பெண் என்ற
பேதம்
நம் அவசரத்தேவைக்காக
மட்டும் இருக்கட்டும்.

மற்றபடி பிறப்புமுதல்
இறப்புவரை
உணர்ச்சியும் வலியும்
ஒன்றுதான்.

ஆண் உடம்பில்
ரத்தம் - 5 1/2 லிட்டர்.
பெண் உடம்பில் -
5 லிட்டர் என்ற
பேதமிருந்தாலும் செல்களின்
செயல்கள் ஒன்றுதான்.

எனவே ஆணுக்குத்தான் அதிக
உரிமை. பெண்ணுக்கில்லை என்ற
பிற்போக்குத்தனத்திலிருந்து
பிதுங்கி வெளியே வா.

ஏ பணக்கார நத்தையே.
முதலில் நீ உன் தங்கக்கூடு
தகர்.
இந்தப் பிரபஞ்சமே
பொதுவென்று கொள்ளாமல்
மனிதர்கள் மனைப்பட்டா
வாங்கும் போராட்டத்திலேயே
மரித்துப்போகிறார்கள்.

பயன்படுத்தாத வானம் -
பயன்படுத்தாத சூரியன் -
பயன்படுத்தாத நட்சத்திரம் -
பயன்படுத்தாத பூமி -
பயன்படுத்தாத முளை
மனிதகுலத்துக்குப்
பாக்கியிருக்கிறது.

ஒவ்வொரு மனிதனும் தனது
சொந்த
முளையைக்கூட அடுத்தவன்
மனைவிமாதிரி
பாவிப்பதற்குப்
பயப்படுகிறான்.

இரண்டு சதவிகிதத்துக்குமேல்
முளை இங்கே
வேலை வாங்கப்படவில்லை.

தொண்ணூற்றெட்டு சதவிகித
முளை சாகும்வரை
செல்வியாகவே இருக்கிறது.

நான் என் புலன்கள் திறந்து
பிரபஞ்ச எல்லைவரை பறக்கப்
பிரியப்படுகிறேன்.
நீ மழையில் நனைந்த
கிளிக்குஞ்சாய்
மறுகிநின்றால் எப்படி?

சிறகு விரித்து வா.
சிலிர்த்து வா.
உனக்கு நானோ எனக்கு
நீயோ
சுமையாகிப் போகாமல்
துணையாகிப் போவோம் வா.

உனக்கு நான் துன்பம்
செய்திருந்தால்
என்னை நீ மன்னித்துவிடு

நான் உனக்கு நறுக்க நினைத்தென்னவோ
நகம்தான். ஆனால், விரல் காயமாகிவிட்டது.
எப்போதும் படுத்தே கிடக்காதே.
தலையணையொன்றும் மார்க்கண்டேயனின்
சிவலிங்கம் அல்ல.

நம்பிக்கையின் சக்தியை உடலெங்கும் பரப்பு
உன்னை உணர், என்னை நினை.
என்னை மன்னித்துவிட்டாய் என்பதன்
அடையாளமாய் என் குயிலே
தொலைபேசியில் கூவு.

ஆலயமணிகளையும் மாதாகோயில்
மணிகளையும் விட தொலைபேசி
மணியில்தான் நம் காதல் பூஜிக்கப்படுகிறது.

எப்போது கேட்கும் உன் தொலைபேசிச்
சங்கீதம்?
காதலோடு........
கலைவண்ணன்

ஒருதாய் தன் குழந்தையை உறங்கவைப்பது
போல் கடிதத்தின் இமை முடினான். காகிதப்
பறவை சிறகடித்தது.
பத்திரிகைப் பணியை அவன் நேசிக்கிறான்.

அவனுக்கு உலகின் ஜன்னல்களை ஓசையோடு
திறந்துவிட்டது பத்திரிகை.

சூரியன் - பூமி - நிலா இவற்றை
அவன் வாயில் மாத்திரைகளாய்ப் போட்டு
தண்ணீர் ஊற்றியது பத்திரிகை.

அந்தப் பத்திரிகையில் அவன் அதிகம்
நேசிப்பது அவனுக்குத் தந்திருக்கும் சுதந்திரத்தை.
அமைப்புச் சார்புகொண்டவன் எவனும் இங்கே
உண்மை சொல்லமுடிவதில்லை.

அரசு சார்ந்து - அரசியல் சார்ந்து - மதம் சார்ந்து -
தத்துவம் சார்ந்து உண்மைகள் முழுப்பிரசவத்தோடு
வெளிவருவதில்லை.

மக்கள் சார்பு கொண்டவன் மட்டுமே இங்கே
உண்மை பேச முடியும்.

தன்னைப் போலவே தன் பத்திரிகையும்
மக்கள் சார்பு கொண்டது என்ற
நம்பிக்கையில்தான் அவன் அந்த
நாற்காலிக்குத் தாலிக் கட்டியிருந்தான்.

ஒருவகையில் பத்திரிகையும் காதலிதான்.
இரண்டும் குறித்த நேரத்தில் வராவிட்டால்
மாரடைப்பு வந்துவிடும்.

அந்த வாரத்தில் தனக்கான கட்டுரையை
ஆதாரப்படுத்தி, அழகுபடுத்தி உண்மை
களைக்காதிருக்க அங்காங்கே நகைச்சுவை
தெளித்து நயம் சேர்த்தான்.

அவன் இருதயம் மட்டும் தூரத்து மேஜையில்
துடித்துக் கொண்டிருந்தது.

அங்குதான் தொலைபேசி இருந்தது.

அந்த பிளாஸடிக் கூட்டுக்குள் அவன் குயில்
எப்போது கூவும்?

என் காதல் பூஜையின் கோயில்மணி எங்கே?
தொலைபேசியில் ஒலிக்கும் என் தோடி ராகம்
எங்கே?

தயவுசெய்து முணுமுணுக்கவும் என்று
தொலைபேசி அருகே எழுதிவைத்தால் என்ன?
கடைசியில் அது இசைத்தது கலைவண்ணன்
கலைவண்ணன் என்றே அழைத்தது.

ஒன்றாம் மணி அடங்கி இரண்டாம் மணி
முடிவதற்குள் ஓடி எடுத்தான். பெருமுச்சும்
பரபரப்பும் இழைய நான் கலைவண்ணன்
என்றான்.

எதிர்முனையில் கண்ணீர் பேசியது தன்
தாய்மொழியில் பேசியது.

கண்ணீரின் தாய்மொழி விசும்பல்தானே?


கவிஞர் : வைரமுத்து(4-Jan-12, 12:20 pm)
பார்வை : 98


பிரபல கவிஞர்கள்

மேலே