தன்னம்பிக்கை

மரங்கள்
மானுட ஆண்மைக்கு
மண் கொடுத்த சீதனங்கள்
மரங்கள்

நாங்கள்
சிறகுத் துடுப்புகள்
செலுத்திச் செல்கிற
படகுப் பறவைகளின்
பயணியர் விடுதிகள்

எந்தப் பறவைக்கும்
இருக்க இடங்கொடுக்கும்
பொதுவுடைமை வீடுகள்

அதனால்தான்…
தராதரம் அறியாத
தான்தோன்றிப் பறவைகள்
எங்கள் தலைமீதே
எச்சமிட்டுச் செல்கின்றன

நாங்கள்
சூடுபடுகின்ற
சொந்தக்காரர்களுக்காக
விரித்தே வைத்திருக்கும்
வெண்கொற்றக் குடைகள்

மழைக்கும் ஒதுங்கும்
மர நிலையங்கள்
சரியாகப் போடாத
சல்லடைப் பந்தல்கள்
பாத சாரிகளின்
பணிமனைக் கூடங்கள்

மனிதர்கள்
வாங்கி வைக்காத
மண்ணின் விசிறிகள்

மானுடர் கரங்களில்
அகப்பட்டுக் கொண்ட
மண்ணின் கைதிகள்…

அதனால்தான்
ஊருக்கு வெளியே
உட்கார்ந்திருந்தாலும்
எங்கள்
மார்பிலும் தோளிலும்
எண்களை எழுதி
மாட்டி வைக்கிறார்கள்

நாங்கள்
காற்று மன்னவன்
கால்நடை யாத்திரையைக்
கண்டு முரசறையும்
கட்டியங்காரர்கள்

தரையில் நடக்கப்
பிரியப்படாத போது
காற்று எங்கள்
தலைகளின் மீதே
நடந்து செல்கிறது

தென்றலின் பார்வையில்
செல்லப்பிள்ளைகள்
நாங்கள்
புயலின் கண்களில்
புரட்சிக்காரர்கள்

வெட்டி யெடுத்தால்
விறகாவோம்… வெய்யிலிலே
சுட்டு எடுத்தாலும்
சுறுசுறுப்பாய் அடுப்பெரிப்போம்

நாங்கள்
கல்லில் எறிந்தாலும்
கம்பில் அடித்தாலும்
பரிசு கொடுக்கின்ற
பண்பின் வார்ப்புகள்

வானத்தில் நடக்கும்
நட்சத்திர இரவு
விளையாட்டு மேடையில்

தவறி விழுவதைத்
தாங்கிப் பிடிப்பதற்காக
மண்ணில் கட்டிய
வலை விரிப்புகள்

மனிதர்கள்
தூங்கிய பிறகும்
வானத்தில் விளக்கெரிவது
மரங்களுக்காகவே


கவிஞர் : மு. மேத்தா(11-Apr-11, 8:51 pm)
பார்வை : 800


பிரபல கவிஞர்கள்

மேலே