சாவும் ஒரு வாழ்வே!

ஏடா! தமிழ் வீரா! உனை
எலிபோல் நினைத்தாரா?
வாடா படை யூடே அற
வலியின் துணை யோடே!
நாடா பிணக் காடா என
நால்வர் மடிந்தாலும்
போடா அவர் வழியே! நகை
புரிவாள் தமிழ் மொழியே!

குண்டாந்தடி கொண்டே அடி
தந்தார் வெறியாளர்
என்றால் அது நன்றே! உமை
ஈன்றாள் புகழுண்டே!
பண்டை மொழி என்பார் தமிழ்
பார்ப்போம் அதை வீணர்
வென்றா விடுவார்கள்? மற
வேங்கை விடுவானோ?

"முத்தே! முழு நிலவே! விடை
மொழிவாய்!" என இல்லாள்
பத்தே விரல் பற்றி அவள்
பதிலின் வெறி பெற்று...
"சொத்தே! மொழி வித்தே! தமிழ்ச்
சொல்லே! உனக்காகச்
செத்தே மடிகின்றேன்!" எனச்
செல்வாய் தமிழ் ஏறே!


கவிஞர் : காசி ஆனந்தன்(12-Apr-11, 11:24 pm)
பார்வை : 42


மேலே