தமிழச்சி!

இலங்கை மலைதனிலே... தமிழச்சி!
என்ன துயரெலாம் காணுகின்றாயடி!
முழங்கை வலித்திடவே தேயிலை
முளைகள் பறித்து முகம் சிவப்பாயம்மா!
விலங்கும் உறங்கிநிற்கும் சாமத்தில்
விழித்து நெடுமலை ஏறி இறங்குவாய்!
பழங்கள் பழுத்திடாதோ உன் காலில்?
பச்சைக் குருதிநீர் பாயாதோ கண்மணி?

காலைப் பனிநனைவாய்! என்னம்மா...
காய்ந்து நடுவெயில் தனிலே கருகுவாய்;
பாலை நினைந்தழுவான் உன் பிள்ளை...
பாவி வெறும் முலை நினைந்தழுவாயடி!
ஏழை அடிமையடி தமிழச்சி!
இங்கோர் தமிழுடல் ஏனெடுத்தாயம்மா?
ஊழை நினைந்தழவோ? தமிழனின்
உரிமை இலாநிலை எண்ணி அழவோடி?

காட்டு மலைதனிலே... தமிழச்சி!
காலம் முழுவதும் நீ உழைத்தென்னடி?
ஓட்டைக் குடிசையொன்றும் வாழ்விலே
ஓயா வறுமையும் நோயும் இவையன்றி
தேட்டம் எதுபடைத்தாய்? அடி ஒரு
செம்புப் பணமேனும் தேறியதுண்டோடி?
நாட்டின் முதுகெலும்பே தமிழச்சி!
நானிலம் வாழநீ மாள்வதோ அம்மா?


கவிஞர் : காசி ஆனந்தன்(12-Apr-11, 11:19 pm)
பார்வை : 34


மேலே