விடுதலைப் பொன்னாள்

காலங்கனிந்திடும் அழகுதானோ?
படைத்தவன் அருளோ? தமிழ்க்கன்னி
ஞாலம் மகிழ்ந்திட அரசுகொண்டு
வாழும் நாள் அடடா... மலர்ந்தாச்சோ?
கோலம் இதுபெருங் கோலமென்பேன்!
கொடுமைகள் பொடியாயின கண்டீர்!
நீல வான்மிசை தமிழ்நாட்டினர்தம்
கொடிகளும் எழுந்து நிறைந்தனவே!

கூனல் விதிக்கிழவியுடல் தேய்ந்தாள்
நிலைகாணீர்... குடுகுடென ஓடிப்
போன நரிபோலவே போகின்றாள்....
தமிழ் மண்ணின் மனைகள் தெருப்புறங்கள்
ஆன திசைக ளெங்கணுங் கொண்டாட்டம்!
ஒளிப் பந்தல்! அழகின் சிரிப்பம்மா!
மான விடுதலை மலர்ந்த கோலம்
உளங்கண்டு மகிழும் திருநாளோ?

முத்து வளைவுகள்! மணிகள்! பச்சை
மாவிலைப் பந்தல்! முகங்குனியும்
பத்தினிபோல் குலைசரித்த வாழை
தெருப்புறத்தே! கோலம் தரையெல்லாம்!
குத்து விளக்குகள்! மலர்கள்! காற்றில்
எழுந்தாடும் வண்ணக் கொடிக் கூட்டம்!
பத்துத் திசைகளும் அழகுக்காட்சி!
கவிஞன்கண் பார்த்துக் களிப்பதற்கே!

நீள நெடுநாள் அலைந்து களத்தே
போராடி நின்ற தமிழ்மறவர்
ஆள ஒரு நாள் கிடைத்த தென்றே
அணி சேர்ந்து பாடி அகமகிழ்வார்!
பாளையென எழில் முறுவல் விரிப்பர்
இளம் பெண்கள்! அவர் வாய்ப்பனிமுத்தம்
வேளைதொறும் அருந்தி விடுதலை நாள்
களிக்கின்றார் கொழுநர்! விழாவன்றோ?


கவிஞர் : காசி ஆனந்தன்(12-Apr-11, 11:25 pm)
பார்வை : 27


மேலே